Home இந்தியா பாஜக கூட்டணி இல்லை – எடப்பாடியார் தலைமையில் அதிமுக கூட்டத்தில் முடிவு

பாஜக கூட்டணி இல்லை – எடப்பாடியார் தலைமையில் அதிமுக கூட்டத்தில் முடிவு

343
0
SHARE
Ad

சென்னை: இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 25) நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசியல் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. பாஜகவை விட்டு விலகி நிற்பதால் அதிமுகவுக்கு கூடுதல் பயன் விளையுமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

தீர்மானத்தின் முழு வடிவம் பின்வருமாறு:

“தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது”

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் முனுசாமி கூறினார்.