Home இந்தியா இன்று ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

இன்று ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

819
0
SHARE
Ad

electionபுதுடெல்லி, டிசம்பர் 23 – இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான  வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

காலை 10 மணி முதல் முன்னணி நிலவரமும், இரு மாநிலங்களிலும் ஆட்சியை அமைக்கப் போவது யார்  என்பதும் தெரியவரும். கடந்த மே மாதம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையில்  பெரிய வெற்றியுடன் ஆட்சியை அமைத்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் அரியானாவில் தனிப் பெரும்பான்மை  பலத்துடன் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.

#TamilSchoolmychoice

மகாராஷ்டிராவில் தனித்து போட்டியிட்டு, தனிப் பெரும் கட்சியாக விளங்கிய பாஜக ஆட்சியை  அமைத்தது. பின்னர் சிவசேனாவின் ஆதரவும் கிடைத்தது.

இந்த நிலையில் 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீர், 81 தொகுதிகள் கொண்ட  ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல் கடந்த ஒரு மாதமாக 5 கட்டங்களாக நடந்தது.

தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்பில், ஜார்க்கண்டில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டப் பேரவை அமையும்  எனவும் தெரியவந்தது.

இந்த நிலையில் இரு மாநிலங்களிலும் இன்று வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 10 மணி அளவில் முன்னணி  நிலவரங்கள் தெரியவரும்.

election-counting1-600இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா, அரியானாவைத் தொடர்ந்து  ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது. பிரதமர் மோடி, இரு  மாநிலங்களிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியை மீண்டும் பிடிக்கும் முனைப்பில்  உள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது.

ஜார்க்கண்டிலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், கூட்டணி  எதுவும் இல்லாமல் தனியாக தனது பலத்தைக் காட்டியுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் கடந்த 14 ஆண்டுகளில் 9  அரசுகளை பார்த்துள்ளது. இருமுறை அதிபர் ஆட்சி இருந்தது. இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன்  வென்றதில்லை.