Home இந்தியா 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அபார வெற்றி!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அபார வெற்றி!

528
0
SHARE
Ad

indiaமிர்புர், மார்ச் 22 – 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்–10 சுற்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

தகுதி சுற்று முடிந்து நேற்று ‘சூப்பர்–10’ எனப்படும் பிரதான சுற்று போட்டிகள் தொடங்கின. சூப்பர்–10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும்,

குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

#TamilSchoolmychoice

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த நிலையில் சூப்பர்–10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மிர்புர் அறங்கில் நேற்றிரவு சந்தித்தன.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் கம்ரன் அக்மல் 8 ரன்னில் ரன்–அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் முகமது ஹபீஸ், ஜடேஜாவின் சுழலில் சிக்கி 15 ரன்களில் வெளியேற்றப்பட்டார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ரன் சேகரிக்க இயலவில்லை. நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உமர் அக்மல் 33 ரன்களும் (30 பந்து, 2 பவுண்டரி), எதிர்பார்க்கப்பட்ட அப்ரிடி 8 ரன்னும் (10 பந்து) எடுத்தனர்.

பாகிஸ்தானை கட்டுப்படுத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா கூட்டணியாக 12 ஓவர்களில் 63 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 131 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் முதல் 3 ஓவர்களில் (7 ரன்) நிதானம் காட்டினர். ஜூனைட் கானின் 4–வது ஓவரில் ரோகித் ஷர்மா பவுண்டரியும், சிக்சரும் விளாச, சயீத் அஜ்மலின் அடுத்த ஓவரில் தவான் 3 பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்து தந்தது. தவான் 30 ரன்னிலும் (28 பந்து, 5 பவுண்டரி), 155157_599664573445428_1986125316_nரோகித் ஷர்மா 24 ரன்னிலும் (21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த யுவராஜ்சிங் (1 ரன்) கிளீன் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து துணை கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். கோலியும், ரெய்னாவும் பதற்றமின்றி ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு ஓட விட்டனர்.

நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடியை பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. 19–வது ஓவரில் ரெய்னா, சிக்சரும், அதைத் தொடர்ந்து ஒரு ரன்னும் எடுத்து ஆட்டத்தை தித்திப்பாக நிறைவு செய்தார்.

இந்திய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோலி 36 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரெய்னா 35 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோற்பது இது 4–வது முறையாகும். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.