பாட்னா, ஏப்ரல் 2 – பீகார் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும், பணக்காரர் (கோடீஸ்வரர்) ஐக்கிய ஜனதா தளத்தின் அனில் குமார் சர்மா.
இவர் தனது வேட்பு மனுவில் காட்டியுள்ள சொத்து மதிப்பு ரூ.850 கோடி. பீகாரின் பிரபல ரியல் எஸ்டேட் துறை முக்கிய புள்ளியாக உள்ளார் அனில் குமார் சர்மா (50).
முதல்வர் நிதிஷின் கட்சியில் இருந்து, ஜெகானாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஏப்ரல் 17-ல் தேர்தல் நடைபெறுகிறது. பெரும்பாலும் டெல்லியில் வசித்துவந்த இவருக்கு டெல்லி, கிரேட்டர் நொய்டா, கோவா மற்றும் பாட்னாவில் வீடுகள் உள்ளன.
இவரது வேட்புமனுவில் காட்டியுள்ள சொத்துக்களின் விவரம். சர்மா தலைமை பொறுப்பில் இருக்கும் அம்ராபாலி குரூப் கம்பெனிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.815 கோடி.
கடந்த 2012&13-ஆம் ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கலில் இவர் காட்டியுள்ள ஆண்டு வருமானம் ரூ.10.36 கோடி. இவருடைய பெயரில் ஒரு போர்டு என்டேவியர் காரும், கையிருப்பாக ரூ.2.15 கோடியும், ரூ.3.1 கோடி மதிப்புள்ள நகைகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவரது மனைவி பல்லவி மிஸ்ராவிடம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட ரூ.1,75 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சுரேந்திர யாதவும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் அருண் குமாரும் போட்டியிடுகின்றனர்.
இவர்களது சொத்து மதிப்பு முறையே ரூ.4 கோடி மற்றும் ரூ.5 கோடி. மொத்தத்தில் இந்த தொகுதியில் கோடீஸ்வரர்களிடையே தான் பலப்பரீட்சை நடக்கிறது.