கோலாலம்பூர், ஏப்ரல் 8 – MH370 விமானம் மாயமான சம்பவம் காரணமாக சந்தையில் சரிவடைந்துள்ள மாஸ் நிறுவனத்தின் மதிப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்பதை அந்நிறுவனத்தின் தலைவர் அஹ்மட் ஜாவ்ஹாரி யாஹ்யா ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜாவ்ஹாரி, “செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன. விமான நிறுவனம் தன்னகத்தே ஒருங்கிணைக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பதவி விலகுவீர்களா? என்று மீண்டும் ஒருமுறை ஜாவ்ஹாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “இப்போதைக்கு எனக்கு நிறைய வேலைகள் உள்ளன” என்று பதிலளித்தார்.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி MH370 விமானம் காணாமல் போனதில் இருந்து தொடர்ச்சியாக மாஸ் விமானங்களுக்கு பல அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் கூறுகையில், கடந்த 1997 ஆம் ஆண்டு, சில்க்ஏர் நிறுவனத்தின் விமானம் விபத்திற்குள்ளானதில் கண்டறியப்பட்ட அனுபவங்களை அறிந்து கொள்ள சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிட்டார்.