Home இந்தியா பிசுபிசுத்துப் போன ரஜினியின் ஜெயா தொலைக்காட்சி நேர்காணல்!

பிசுபிசுத்துப் போன ரஜினியின் ஜெயா தொலைக்காட்சி நேர்காணல்!

599
0
SHARE
Ad

Rajni Vivek 440 x 215ஏப்ரல் 14 – இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில் ரஜினிக்கு நேர் எதிர் முகாமாகக் கருதப்படும் ஜெயா தொலைக்காட்சியில் இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு அவரது நேர்காணல் ஒளிபரப்பாகும் என்ற செய்தியால், புத்தாண்டும் அதுவுமாக தொலைக்காட்சி முன்னால் ஆர்வமுடன் அமர்ந்த தமிழக ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாயினர்.

#TamilSchoolmychoice

ரஜினியைப் பேட்டி எடுத்த நகைச்சுவை நடிகர் விவேக் தனது அதிகப் பிரசங்கித்தனத்தால், ரஜினியைப் பேசவிடாமல் தானே எல்லா விஷயங்களையும் விரிவாகப் பேசி, தனக்கு இவ்வளவு தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதைப் போல் வளவளவென்று பேசிக் கொண்டே இருந்தது நிச்சயம் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்திருந்த ரஜினி ரசிகர்களை வெகுவாக வெறுப்பேற்றியிருக்கும்.

ஒரு நேர்காணல் என்பது பேட்டி காண்பவர், பேட்டி காணப்படும் விருந்தினரின் சில அந்தரங்கப் பக்கங்களை, அவரது வாழ்க்கையின் சில சுவாரசியத் தருணங்களை, அதுவும் வந்திருக்கும் விருந்தினர் இதுவரை வெளியில் சொல்லாத விஷயங்களைப் பற்றி சொல்லும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் கேள்விக் கணைகள் கூர்மையானதாக, விஷயங்களை வெளிக் கொணரும் விதத்தில் சிந்தித்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் இல்லாத நேர்காணல்

ஆனால், ரஜினியுடனான விவேக்கின் இன்றைய நேர்காணல் அதற்கு நேர்மாறாக இருந்தது. அரசியல் கேள்விகள் இல்லாமல், கோச்சடையான் திரைப்படத்தைச் சுற்றியே கேள்விகள் இருந்த காரணத்தால், நேர்காணல் போரடித்தது.

ரஜினி அரசியல் கேள்விகளை தவிர்த்து விடுவார் என்பதும் எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால், கோச்சடையான் பற்றியும் புதிய விஷயங்கள் எதையும் ரஜினி பகிர்ந்து கொள்ளவில்லை. பல கேள்விகளுக்கு “இதையெல்லாம் நீங்கள் (மகள்) இயக்குநர் சௌந்தர்யாவிடம் கேட்க வேண்டும். அவர் மேலும் விளக்கமாக, விரிவாகக் கூறுவார்” என்ற ரீதியில் ரஜினி பதிலளித்தார்.

அதிலும் கோச்சடையான் பற்றி ஏற்கனவே பல பத்திரிக்கைகளிலும், பல பேட்டிகளிலும் பேசப்பட்ட விவகாரங்கள்தான் மீண்டும் மீண்டும் கேள்விகளாக விவேக்கால் கேட்கப்பட்டன.

அந்தக் கேள்விகளையும் விவேக் நேரடியாகக் கேட்காமல், சுற்றி வளைத்து, தனக்குத் தெரிந்த சில விஷயங்களையும், சம்பவங்களையும் சேர்த்து அவரே எல்லாவற்றையும் அதிகப் பிரசங்கித் தனமாக பேசிவிட்டு பின்னர் கடைசியாகத்தான் கேள்வியாக ரஜினியைக் கேட்டார். ரஜினியும், ஓரிரு வாக்கியங்களுக்குள் தனது பதிலைக் கூறிவிட்டார்.

இப்படியாகவே நேர்காணல் முழுவதும் போய்க் கொண்டிருந்தது.

அதிகப்படியான விளம்பரங்கள்

அந்தரங்கமான விஷயங்கள் எதையும் கூட ரஜினி இன்றைய நேர்காணலில் கூறவில்லை. ஏற்கனவே தான் கூறியிருந்த சில கருத்துக்களைத்தான் மீண்டும் கூறினார்.

அதைவிடக் கொடுமையாக ஐந்து நிமிடங்களே பேட்டி நேரம் ஒளிபரப்பப்பட்டு அதன் பின்னர் சுமார் பத்து நிமிடங்களுக்கும் கூடுதலாக விளம்பரங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாயின.

இதனால், ரஜினிகாந்தின் நேர்காணல் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நீடித்தது. ஆனால் ரஜினியின் நேர்காணல் மொத்தமே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கும்.

மீதியெல்லாம் விளம்பரங்கள்தான்! விளம்பரங்கள் ஒரு தொலைக்காட்சிக்கு வணிக ரீதியாக முக்கிம்தான் என்றாலும், அதனை முறையாக இடைவெளி விட்டு செய்திருக்க வேண்டும்.

அதே போன்று, விவேக் மட்டுமே நேர்காணல் முழுவதும் பேசிக் கொண்டிருக்கும் படி இல்லாமல், எப்போதோ ஒரு முறைதான் பேட்டி தருபவர் ரஜினிகாந்த் என்பதை உணர்ந்து, அவர் வாயால் சில விஷயங்களை சொல்லும்படி செய்திருந்தால்,  இந்த நேர்காணல் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்து நின்றிருக்கும்.

-இரா.முத்தரசன்