சென்னை, மே 1 – இன்று தொழிலாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா: ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளராது உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகள்.
திமுக தலைவர் கருணாநிதி: தொழிலாளர் சமுதாயம் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்தி இந்த மே தின நன்னாளில் எனது நல்வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் உரித்தாக்குகிறேன்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்: தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட அவர்களின் உழைப்பிற்குரிய மதிப்பு கிடைத்திட திமுக என்றும் துணை நிற்கும் என்ற உறுதியை வழங்கி, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தேமுதிகவின் லட்சியமாகும். நமது பொருளாதாரத்தையும் நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவதில் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்: உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாக மத்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்: தொழிலாளர்கள் வளரவும், வாழவும், உயரவும் நாம் அவர்களுக்குத் துணை நிற்போம். அதனையே தொழிலாளர் தின சபதமாக ஏற்போம். தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த மே தின நன்னாளில் சூளுரைப்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தொழிலாளர் வாட்டத்தை போக்க வேண்டிய ஆட்சியாளர்கள் பணத்தை கொடுத்து இவர்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் அவல நிலை உள்ளது. இது மாற வேண்டும்.
மதிமுக கட்சி தலைவர் வைகோ: ஈழ தமிழ் குலத்துக்கும், தாய் தமிழகத்துக்கும் கொடிய வஞ்சகமும், துரோகமும் செய்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையப்போகிறது. இதனை மனதில் கொண்டு மே தினத்தை கொண்டாடுவோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் கொத்தடிமைகளாக வாழ்ந்துவரும் கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டும். இது நமது கடமை.
சமக கட்சி தலைவர் சரத்குமார்: தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் நியாயமான ஊதியத்தையும் பெற்றுதர மே நன்னாளில் உறுதியேற்போம். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.