இங்லக் சினவத்ரா முன்னாள் தாய்லாந்து பிரதமரும் தற்போது நாடு கடந்து வாழ்பவருமான தக்சின் சினவத்ராவின் தங்கையுமாவார்.
தாய்லாந்தில் ஆட்சியில் இருந்து வரும் பியு தாய் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பொறுப்பேற்று ஆளும் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரித்த தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் இங்லக் சினவத்ரா பதவி விலக வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பை இங்லக் சினவத்ராவின் பியு தாய் கட்சி நிராகரித்ததோடு அது ஒரு சதிச் செயல் என்றும் வர்ணித்தது.
இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத மக்கள் இதனை எதிர்த்துப் போராட முன்வர வேண்டுமென அந்த கட்சி வேண்டுகோள் விடுத்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளில் மக்களைச் சந்தித்து இது குறித்து விளக்குவார்கள் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற அரசை மறைமுகமாக தூக்கியெறியும் நியாயமற்ற செயல் இது என்றும் பியு தாய் கட்சி சாடியுள்ளது.