மே 20 – திறன்பேசிகள் மூலம் குறுந்தகவல்கள் , புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் போன்றவற்றினை செலவின்றி பகிர்ந்து கொள்வதற்கு பயன்படும் செயலி ‘வாட்ஸ்அப்’ (WhatsApp).
அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தினால் பல பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்ட இந்த செயலியானது, ஆப்பிள் மற்றும் விண்டோஸ் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்களால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த செயலி ‘Windows Phone Store’ தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் பயனர்கள் Windows Phone Store தளத்தில் இதனை பதிவிறக்கம் செய்ய எத்தனிக்கும் பொழுது “குறித்த செயலி கிடைக்கப்பெறவில்லை” என்ற செய்தியே காட்டப்படுகின்றது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விண்டோஸ் போன் 8.1 இயங்குதளத்தில், வாட்ஸ்அப் செயலி செயற்படும்போது சில தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப் செயலியானது அந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து விண்டோஸ் போன் மையம் கூறுகையில், “துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளால் வாட்ஸ்அப் செயலி விண்டோஸ் போன் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும்” என்று கூறியுள்ளது.