கொழும்பு, மே 20 – இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்காத நாடுகளை அதிபர் ராஜபக்சே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009 மே18-ல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், விடுதலைப்புலிகளை அந்நாட்டு ராணுவம் வீழ்த்தியது. இந்த நாளை ஆண்டுதோறும் வெற்றி தினமாக இலங்கை அரசு கொண்டாடி வருகின்றது. இதில் பங்கேற்குமாறு இலங்கையில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. எனினும், கனடா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் வெற்றி தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்தனர்.
இது குறித்து கனடா தூதர் ஷெல்லி ஒயிட்டிங் கூறுகையில், “வெற்றி தின அணிவகுப்பை இராணுவம் தற்போது நடத்துவது பொருத்தமற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில்தான் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே தனது சொந்த ஊரான மாதராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில், “சில நாடுகள், நாம் இந்த வெற்றியைக் கொண்டாடுவதை எதிர்க்கின்றன. அந்நாட்டு அரசுகள் பல வேளைகளில் எதையும் பார்ப்பதில்லை, எதையும் கேட்பதில்லை, எதையும் சொல்வதில்லை என்ற அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், இதைக் கொண்டாடுவதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.”
“நாம் அமைதியின் வெற்றியைத்தான் கொண்டாடுகிறோமே தவிர, போரின் வெற்றியை அல்ல. நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த போரில், உயிர் துறந்த, 3,000 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே, இந்த கொண்டாட்டங்களை நடத்துகிறோம். இந்தக் கொண்டாட்டத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.