மாஸ்கோ, மே 20 – உக்ரைன் விவகாரம் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் ரஷ்யா, தனக்கு ஆதரவாக உள்ள சீனாவின் உறவை பலப்படுத்த விரும்புகின்றது. அதன் காரணமாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இன்று சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து புடின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவுடன் உயர்நிலை அளவிலான உறவை ரஷ்யா விரும்புகிறது. எனவே இருதரப்பு உறவை மேம்படுத்தும் விதமாக நான் அங்கு செல்ல உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
சீனாவில் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்வதால், ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயுவை அந்நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகலாம் என்றும், இதன் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி பரவலாகும் என்றும் கூறப்படுகின்றது.
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியான இயற்கை எரிவாயு தடை பட்டுப் போனதால், தற்போது சீனாவுடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.