ஷாங்காய், மே 20 – சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினர் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். கிழக்கு சீனக் கடலில் நாளை தொடங்க இருக்கும் இந்த போர்ப் பயிற்சி 26-ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகின்றது.
இராணுவப் பயிற்சியில் மூன்றாவது முறையாக இணைய விருப்பதால், இரு நாடுகளுகிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டு போர் பயிற்சிக்காக 6 ரஷ்ய கப்பல்கள் ஷாங்காய் கடல் பகுதிக்கு வந்துள்ளன.
இதுகுறித்து சீனக் கப்பல் படை அதிகாரி கூறியதாவது:-
“நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் தானாகவே போரிடும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த கூட்டுப் போர் ஒத்திகை மூலமாக இரு நாடுகளும் புதிய சவால்களை எளிதில் சமாளிக்க முடியும். முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற போர் ஒத்திகையை விட திறன் வாய்ந்த படைகளைக் கொண்டு இந்த பயிற்சி நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஆசியாவில் தனது ஆளுமையை செலுத்த நினைப்பதனால், அதன் பரம எதிரியான ரஷ்யாவுடன், சீனா இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கருதப்படுகின்றது.