புதுடில்லி, மே 20 – இந்தியப் பொதுத் தேர்தலில் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வட இந்தியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொகுதி பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகார் தொகுதி.
பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர்ரின் மனைவியும், பல இந்திப் படங்களில் தாய் வேடங்களில் நடித்து புகழ் பெற்றவருமான கிரண் கெர் பாஜக வேட்பாளராக சண்டிகாரில் போட்டியிட்டார்.
(கிரண் கெர், தனது கணவர் அனுபம் கெர்ருடன்)
அவரை எதிர்த்து போட்டியில் குதித்தவர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குல் பனாக் என்ற மற்றொரு இளமையான கவர்ச்சி நடிகை. அதுமட்டுமல்ல,1999ஆம் ஆண்டில் இந்திய அழகிப் போட்டியிலும் முதல் நிலையில் வென்றவர்.
இவர்கள் இருவரும் எதிர்த்து நின்றது காங்கிரசின் பலம் பொருந்திய வேட்பாளரும், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பவன்குமார் பன்சால். இவர் முன்னாள் இரயில்வே அமைச்சரும் ஆவார்.
இதனால் அனைத்து தகவல் ஊடகங்களின் கவனத்தையும் சண்டிகார் தொகுதி ஈர்த்திருந்தது.
இந்தப் போட்டியில் பாஜகவின் கிரண் கெர் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியிருக்கின்றார்.
இரண்டாவது நிலையில் அதிக வாக்குகளை பவன் குமார் பெற, குல் பனாக் மூன்றாவது இடத்தையே அடைய முடிந்தது.
கிரண் கெர் இந்த தேர்தலில்தான் முதன் முறையாகப் போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.