புதுடில்லி, மே 18 – ஒரு காலத்தில் தனது அழகாலும், நாட்டியத் திறனாலும், நடிப்பாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்துப் பட இரசிகர்களையும் கட்டிப் போட்டவர் ஜெயப்பிரதா.
தமிழிலும் சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள் என பல படங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தவர் பின்னர் அரசியலில் குதித்தார்.
ஜெயப்பிரதா முதலில் தெலுகு தேசம், பின்னர் சமஜ்வாடி கட்சி, கடைசியாக ராஷ்ட்ரிய லோக் டால் என்ற உத்தரப்பிரதேச கட்சியில் சேர்ந்தார். அமர் சிங் என்பவர் இதன் தலைவராவார்.
இந்த முறை காங்கிரஸ் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய லோக் டால் கட்சியின் சார்பாக, மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள பிஜ்னுர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயப்பிரதா மோசமாகத் தோல்வியடைந்துள்ளார்.
போட்டியிட்ட வேட்பாளர்களில் நான்காவது இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. வெறும் 24 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளையே அவரால் பெற முடிந்தது.
இங்கு பாஜகவின் குன்வார் பார்தென்ரா என்பவர் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். அடுத்த நிலையில் சமஜ்வாடி கட்சியின் வேட்பாளர் வந்திருக்கின்றார்.
ஆனால், ஏற்கனவே ராம்பூர் தொகுதியில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயப்பிரதா வென்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.