Home இந்தியா இந்தியத் தேர்தல் : நட்சத்திரத் தொகுதிகள் (4) – ஜெயப்பிரதாவின் அழகு மட்டும் ராம்பூர் தொகுதியை...

இந்தியத் தேர்தல் : நட்சத்திரத் தொகுதிகள் (4) – ஜெயப்பிரதாவின் அழகு மட்டும் ராம்பூர் தொகுதியை வெல்ல முடியுமா?

896
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1980-ஆம் ஆண்டுகளில் இந்தியத் திரையுலகில் நுழைந்த நடிகைகளில், தனது தனித்துவ முக அழகாலும் – உடல் வடிவமைப்பிலும் கோடிக்கணக்கான இரசிகர்களை இந்தியா முழுவதுமாகக் கவர்ந்தவர் ஜெயப்பிரதா.

ஜெயப்பிரதாவின் இளமைக்காலத் தோற்றம்

தமிழில் 47 நாட்கள், நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி போன்ற படங்களில் தமிழ் இரசிகர்களைக் கட்டிப் போட்டவர், அப்படியே தெலுங்குப் பக்கமும் கொடி நாட்டினார். அவரது பூர்வீகமும் தெலுங்குதான். தமிழிலும், தெலுங்கிலும் சினிமாவில் உச்சிக்குச் சென்ற அவரது அழகால் கவரப்பட்ட இந்தித் திரையுலகமும் அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க, அங்கேயும் பல இந்திப் படங்களில், முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றார் ஜெயப்பிரதா.

ஆகக் கடைசியாக கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் பஞ்சாபிப் பாடகர் கமலின் மனைவியாக வந்தார் ஜெயப்பிரதா.

#TamilSchoolmychoice

ஸ்ரீகாந்த் நஹாதா என்ற தயாரிப்பாளருக்கு மனைவியானவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பதைத் தவிர அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்த பின்புலங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை.

தெலுங்கு தேசம் கட்சியில் தொடங்கிய அரசியல் பயணம்

முதலில் தெலுங்கு தேசம் கட்சி வழியாக சந்திரபாபுவுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடக்கிய ஜெயப்பிரதா, பின்னர் வடநாட்டிலும் பரவியிருந்த தனது புகழைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் உத்தரப் பிரதேச அரசியலில் கால் பதித்தார்.

உத்தரப் பிரதேச அரசியலில் 2000-ஆம் ஆண்டுகளில் பிரபலமானவராகத் திகழ்ந்த அமர்சிங்குடன் நெருக்கமானவராகக் கருதப்பட்ட ஜெயப்பிரதா அமர்சிங் சார்ந்திருந்த சமஜ்வாடி கட்சியில் சேர்ந்து 2004-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதே ராம்பூர் தொகுதியில் (உத்தரப் பிரதேசம்) போட்டியிட்டு வென்றார். பின்னர் 2009-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது அவரை எதிர்த்து நின்ற அசாம் கான்தான் இப்போது மீண்டும் 2019 பொதுத் தேர்தலில், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெயப்பிரதாவை எதிர்த்துக் களம் காண்கிறார்.

2014 பொதுத் தேர்தலில் மற்றொரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார் ஜெயப்பிரதா.

அமர்சிங்குடனான அரசியல் பயணத்தில் சமஜ்வாடி, ஆர்எல்டி கட்சி என வடநாட்டு அரசியலில் ஒரு சுற்று வந்த ஜெயப்பிரதா இறுதியாக இந்த ஆண்டு பாஜகவில் சேர, அவருக்கு உடனே ராம்பூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அசாம் கானின் மட்டகரப் பேச்சு

ஜெயப்பிரதாவை எதிர்த்துப் போட்டியிடும் அசாம் கான்

ஜெயப்பிரதாவின் பழைய நண்பரும், பின்னர் அரசியல் எதிரியாக மாறியவருமான அசாம் கான், தனது பிரச்சாரத்தின்போது, ஜெயப்பிரதாவை மட்டமான முறையில் அவரது உள்ளாடைகளை சம்பந்தப்படுத்தி விமர்சிக்க அது உடனே அகில இந்திய அளவில் சர்ச்சையானது. தேர்தல் ஆணையமும் அசாம் கானுக்கு சில நாட்கள் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்தது.

இதன் காரணமாக, ஜெயப்பிரதாவுக்கு பெண் வாக்காளர் மத்தியில் அனுதாபம் பிறந்துள்ளதாக கணிக்கப்படுகிறது. ஆண் வாக்காளர்களை ஏற்கனவே தனது திரையுலகப் பிரபலத்தால் ஈர்த்துள்ள ஜெயப்பிரதா அசாம் கானை ராம்பூரில் தோற்கடித்தால், தொடர்ந்து பாஜகவில் முக்கிய இடத்தை அவர் அரசியல் ரீதியாகப் பிடிக்கக் கூடும்.

காரணம், சமஜ்வாடி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், அந்தக் கட்சியின் சார்பில் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் வாக்காளர்களைத் திரட்டக் கூடிய பிரமுகராகவும் அசாம் கான் திகழ்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் இருபெரும் அரசியல் சக்திகளான மாயாவதியும், அகிலேஷூம் (சமஜ்வாடி கட்சி) இணைந்து கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்தியப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டவணைப்படி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ராம்பூர் தொகுதிக்கான வாக்களிப்பு கடுமையான பரப்புரைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது.

ராம்பூர் தொகுதியை பாஜகவுக்குப் பெற்றுத் தருவாரா ஜெயப்பிரதா?

-இரா.முத்தரசன்