கோலாலம்பூர் – வாட்சாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், வாட்சாப் நிறுவனத்தால், அதன் பயனர்களின் தகவல்களுக்கு என்றுமே பாதுகாப்பு அளிக்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செக்கோஸ்லாவாகியாவின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “வாட்சாப்பின் சர்வர்கள் அதன் பயனர்களின் எண் சார்ந்த அனைத்து தகவல்களையும் தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்கிறன. சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்து மறைகுறியாக்கப்பட்டவையாகவே (Encrypted) இருந்தாலும் என்றாவது ஒருநாள், ஹேக்கர்கள் வாட்சாப் தகவல்களை திருடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இணையம் என்று இருந்தால், இணையத் திருட்டு இருக்கத்தான் செய்யும். என்றோ ஒருநாள் ஹேக் செய்யப்படும் என்பதற்காக நட்பு ஊடகங்களை முற்றிலும் தவிர்ப்பது ஏற்புடையதல்ல என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.