கொழும்பு, மே 22 – இலங்கை இராணுவ முகாமில், சரணடைந்த விடுதலைபுலிகளின் ஊடகப் போராளி இசைப்பிரியா கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் சரணடைந்ததற்கான புகைப்படங்கள் கடந்த 18-ம் தேதி வெளியானது. இந்த விவகாரத்தில், இலங்கை இராணுவம் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
இசைப்பிரியா விவகாரம் தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகைப்படங்களில் இருப்பவர்கள் யார்? என்பது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களின் பெயர்கள் இசைப்பிரியா, உஷாளினி என்பதைக் கூட ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டோம். இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், இலங்கை ராணுவத்துக்கு எதிராக சேனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள், உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது தொடர்பாக இராணுவ விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
இசைப்பிரியா விவகாரத்தில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தாலும், இலங்கை அரசின் நாடகத்தனமான பதில்கள் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.