கெய்ரோ, மே 22 – எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், அரசு நிதியை கையாடல் செய்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்து அதிபர் மாளிகையின் புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட 125 மில்லியன் எகிப்திய பவுண்டுகளை கையாடல் செய்ததாக முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று, அந்த வழக்கிற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் முபாரக்கிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகன்களான அல்லா முபாரக் மற்றும் கமல் முபாரக்கிற்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் கையாடல் செய்த பணத்தையும், இந்த வழக்கிற்காக செலவிடப்பட்ட 21.197 மில்லியன் எகிப்திய பவுண்டுகளையும், அந்நாட்டு கருவூலத்தில் செலுத்தும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எகிப்தை 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக் மீது பதவியை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் கிளர்ச்சியாளர்களைக் கொன்றது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்கில் முபாரக்கிற்கும், அவரது ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அல்-அட்லிக்கும் ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முபாரக் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.