கெய்ரோ, டிசம்பர் 1 – எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், 900 பேரை கொன்ற வழக்கில் இருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு ‘அராப் ஸ்பிரிங்’ (Arab Spring) என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது.
இந்தப் புரட்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக, வெடித்தெழுந்தபோது அந்நாட்டு இராணுவம் கையாண்ட அடக்குமுறைகளால் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு முறையாக விளக்கம் அளிக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும், இந்த வழக்கின் மீது மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முபாரக் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, முபாரக், அவரது உள்துறை அமைச்சர் ஹபீப் அல்-அட்லி மற்றும் 6 இராணுவ உயரதிகாரிகள் மீது கெய்ரோ நீதிமன்றத்தில், கடந்த ஏப்ரல் மாதம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
“இந்த வழக்கில் சுமார் 900 போராட்டக்காரர்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹோஸ்னி முபாரக், அவரது அமைச்சர் ஹபிப் அல்-அட்லி மற்றும் 6 ராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
முபாரக்கின் விடுதலையை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியதால், காவல் துறை, போராட்டக்காரர்களை அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் ஏற்பட்ட சண்டையில் போராட்டக்காரர்கள் இருவர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.