லாகூர், டிசம்பர் 2 – பாகிஸ்தானின் ‘தெக்ரிக் இ இன்சாப்’ கட்சியின் தலைவர் இம்ரான் கானை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அவை அனைத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்,
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், கடந்த சில மாதங்களாக அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் அவர், நவாஸ் ஷெரீப்பின் அரசை செயல்பட விடக்கூடாது என்ற நோக்கத்துடன் லாகூரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி ஒன்றை இன்று நடத்த இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அந்தப் பேரணியில் இம்ரானும் கலந்து கொள் இருக்கிறார் என்றும், அப்போது அவர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த தலிபான்கள், ஜுன்டாலா மற்றும் ஜமாத்துல் அஹ்ரார் போன்ற தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இம்ரானின் போராட்டத்தை தடுக்க பாகிஸ்தான் அரசு பரப்பிய திட்டமிட்ட வதந்தி இது என தெக்ரிக் இ இன்சாப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.