சிங்கப்பூர், மே 27 – எதிர் வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாடு தனது 116 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருகின்றது. இதனை முன்னிட்டு சிங்கப்பூரில் வாழும் பிலிப்பைன்ஸ் மக்கள் சிலர் ஒருங்கிணைந்து தங்களின் சுதந்திர தினச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டாடத் திட்டமிட்டனர்.
ஜூன் மாதம் 8-ஆம் தேதியன்று சிங்கப்பூரில் பரபரப்பாக இயங்கும் ஆர்ச்சர்ட் தெருவில் உள்ள நிகி ஆன் சிட்டி வர்த்தக மையத்தில் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று அந்த விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டதாக சிங்கப்பூர் நகர காவல்துறை அறிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டிற்கான பிலிப்பைன்ஸ் சுதந்திர தின அமைப்பாளர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்று ஒழுங்கு குறித்து காவல்துறையினர் வெளியிட்ட பாதுகாப்புக் கவலைகளைத் தொடர்ந்து, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
கன்வென்ஷன் மையம், பேச்சுரிமை பூங்கா போன்ற பிற இடங்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்துமாறு அவர்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அமைப்பாளர்களிடமிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.
உள்ளூர் வலைத்தளங்கள் மற்றும் நட்பு ஊடகமான பேஸ்புக் பக்கங்களில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் இடத்தேர்வு குறித்த இனவெறியைத் தூண்டும் விதமான அறிவிப்புகளும், வெளிநாட்டின் சுதந்திர தினம் இங்கு கொண்டாடப்படுவது குறித்து எழுந்த கருத்துகளுமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.