கோலாலம்பூர், மே 31 – துருக்கி நாட்டின் தலைநகர்,இஸ்தான்புல் நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாஸ் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு தேவையான உதவிகளை வழங்கும்படி துருக்கியில் உள்ள மலேசிய தூதரகத்தை தான் கேட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
ஹாடியைப் பற்றிய தகவல் கிடைத்தவுடன் துருக்கியில் உள்ள மலேசியத் தூதரகத்துடன் தான் தொடர்புகொண்டதாக அவர் தெரிவித்தார்.
இஸ்தான்புல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹாடி அவாங் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தவுடன், அவருக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதிபடுத்த சனிக்கிழமை காலையில் தூதரகத்துடன் தொடர்பு கொண்டேன் என்று பிரதமர் தமது ட்விட்டர் அகப்பக்கத்தில் குறிப்பிட்டார்.
சீனா – மலேசியா அரச தந்திர உறவுகளின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நஜிப் ஆறு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார்.
திரெங்கானு, மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ஹாடி மூச்சுவிட சிரமப்பட்டதால் வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணியளவில் (மலேசிய நேரம்) இஸ்தான்புல்லில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக இணையதள தகவல் ஒன்று தெரிவித்தது.