Home நாடு பாஸ் கட்சியின் 5 முக்கியப் பொறுப்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

பாஸ் கட்சியின் 5 முக்கியப் பொறுப்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

389
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் 69-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தல்களில் – அந்தக் கட்சியின் ஐந்து முக்கிய பொறுப்பாளர்களும் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2023 முதல் 2025 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் தங்களின் பதவியை வகிப்பர்.

கட்சித் தலைவராக ஹாஜி ஹாடி அவாங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 முதல் அவர் இந்தப் பதவியை வெற்றிகரமாக தற்காத்து வருகிறார். நாட்டிலுள்ள 197 பாஸ் கட்சி தொகுதிகளும் தங்களின் தேசிய நிலை வேட்பாளர்களுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் படலம் முடிவடைந்ததும் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியூடின் ஹாசான் இந்த விவரங்களை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

கட்சியின் துணைத் தலைவராக துவான் இப்ராஹிம் துவான் மான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2015 முதல் அவர் பாஸ் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

மூன்று உதவி தலைவர்களுக்கான தேர்தலில் நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவர்களில் கெடா மந்திரி பெசார் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மறுப்பு தெரிவித்து விட்டதால் அவரது வேட்பு மனு மீட்டுக் கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் இட்ரிஸ் அகமட், கிளந்தான் சட்டமன்ற அவைத் தலைவர் முகமட் அமார் அப்துல்லா, திரெங்கானு மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தார் ஆகிய மூவரும் தேசிய உதவித் தலைவர்களாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எனவே இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாஸ் கட்சி தேர்தல்களில் 18 மத்திய செலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என்றும் பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியூடின் ஹாசான் தெரிவித்தார்,

அக்டோபர் 20 முதல் 22 வரை ஷா ஆலாமில் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து சுமார் 1,400 பேராளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக அக்டோபர் 18, 19-ஆம் தேதிகளில் பாஸ் இளைஞர், மகளிர் பகுதிகளுக்கான மாநாடுகள் நடைபெறும். அதே வாரத்தில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கான பிரிவின் மாநாடும், மூத்த உறுப்பினர்களுக்கான மாநாடும் நடைபெறும்.