
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது அனைத்துலக அளவில் அவர் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு, இன்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறைக்கு சமர்ப்பிக்கப்படும் என காவல்துறையின் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) அயூப் கான் மைதீன் பிச்சை தெரிவித்தார்.
மொகிதின் யாசின் மருமகன் மீதும் அவருடன் இணைந்து தேடப்படும் மற்றொரு வழக்கறிஞர் மன்சூர் சாட் என்பவரின் பெயரும் சிவப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என அயூப்கான் தெரிவித்தார்.
இதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நிறைவு செய்ததும் அனைத்துலக காவல் துறைக்கு சிவப்பு முன்னெச்சரிக்கை அறிக்கை அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.