கோலாலம்பூர் : பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் இதய நோய் காரணமாக தலைநகர் தேசிய இருதய மருத்துவமனைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதைக் கேள்விப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஹாடி அவாங்கைச் சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) வருகை தந்தார்.
எனினும் அப்போது ஹாடி அவாங்கிற்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அவரை அன்வார் சந்திக்க இயலவில்லை.
பாஸ் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியூடின் ஹாசான், இது குறித்து கருத்துரைக்கையில், ஹாடி அவாங் தற்போது சீரான உடல்நிலையோடு இருக்கிறார், இருப்பினும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்தார்.
“பிரதமர் அன்வார் வருகை எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் வருகை தந்தபோது ஹாடி அவாங்கிற்கு மருத்துவர்கள் முக்கிய சிகிச்சை ஒன்றை வழங்கிக் கொண்டிருந்தனர். அதன் காரணமாக பிரதமர் ஹாடி அவாங்கை நேரடியாகச் சந்திக்க இயலவில்லை” என்றும் தக்கியூடின் ஹாசான் தெரிவித்தார்.