சென்னை, ஜூன் 1 – தன்னை சந்திக்க அனுமதி கொடுக்காமல், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க மோடி அனுமதி அளித்துள்ளதால், தமிழக பாஜ கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் முடிவை வருகிற 4-ஆம் தேதி அறிவிக்கும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மோடி, பிரதமராக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ஜெயலலிதாதான் பிரதமர் வேட்பாளர் என்று அதிமுக மூத்த அமைச்சர்கள் அறிவித்தனர்.
3-வது அணியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஜெயலலிதா ஆதரவு திரட்டிவந்தார். இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் தருவதாகக் கூறியதால், அந்தக் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அதிமுக தனித்துப் போட்டியிட்டது. பாஜவுடன் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. பாஜ, பாமக, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றது.
பாஜ கூட்டணியில் அதிக இடங்களைப் பிடிக்க முடியாவிட் டாலும், விஜயகாந்த் தமிழகம் முழுவதும் செய்த பிரச்சாரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டெல்லியில் பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டத்துக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, விஜயகாந்த்தின் கன்னத்தை தடவி, கட்டிப் பிடித்து மோடி பாராட்டினார். விஜயகாந்த் மகிழ்ச்சி அடைந்தார். இந்தநிலையில் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும், ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா டெல்லி செல்லவில்லை.
ஆனால் விஜயகாந்த் டெல்லி சென்றார். ஆனால் முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை. முறையாக அழைக்கவில்லை என்ற காரணத்தால் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து விட்டு தங்கும் விடுதியில் தங்கி விட்டார் விஜயகாந்த்.
இதனால், விஜயகாந்த்தை சமரசப்படுத்த பாஜ மூத்த தலைவர்கள் வருவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். யாரும் வரவில்லை. டெல்லியில், 3 நாட்கள் தங்கியிருந்த விஜயகாந்த், பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டார்.
அவர்கள் விஜயகாந்த்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விஜயகாந்த், தமிழக பாஜ கூட்டணியில் இருந்து தான் வெளியேறும் முடிவை வருகிற 4-ஆம் தேதி அறிவிப்பார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.