கோலாலம்பூர், ஜூன் 23 – கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டி வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக இருந்தது.
அந்த கடுமையான போட்டியில் முதலாவதாக டத்தோ சோதிநாதனும் இரண்டாவதாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் டத்தோ சரவணனும் மூன்றாவதாக ஜொகூர் டத்தோ பாலகிருஷ்ணனும் வெற்றி பெற்றார்கள்.
ஆனால், கட்சித் தேர்தலில் பேராளர்களால் ஜனநாயக முறைப்படி வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இரண்டு தேசிய உதவித் தலைவர்களும், அரசாங்கப் பதவி என்று வரும்போது மஇகா தேசியத் தலைவர் பழனிவேலுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது ம.இ.கா வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உதவித் தலைவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பதிலாக, பதிலாக உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டிருப்பது மஇகாவின் கட்சித் தேர்தல்களையும் அந்த தேர்தல்களின் ஜனநாயக முடிவுகளையும் சிறுமைப்படுத்தியுள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உதவித் தலைவர்களை நியமிக்காதது ஏன்?
நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் இருந்த செனட்டர் நியமனங்களில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தேசிய உதவித் தலைவர்களுக்கும் செனட்டர் பதவிகள் வழங்கி அதன்வழி அவர்களை அரசாங்கத்தில் இடம் பெறச் செய்திருந்தால் அதனால் கட்சியின் தோற்றமும் வலுவுடன் இருந்திருக்கும்.
ம.இ.காவின் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ சரவணன் தற்போது துணை அமைச்சராக இருந்து வருகின்றார்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உதவித் தலைவர்களுக்கும் செனட்டர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தால் மஇகாவின் முதல் ஐந்து நிலைகளிலான தலைவர்களும் அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற பெருமையும் கட்சிக்கு கிடைத்திருக்கும்.
இந்த புதிய நியமனங்களால் டத்தோ சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஏமாற்றத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர்.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவபவர்களுக்குக் கூட குறைந்தபட்சம் செனட்டர் பதவிகள் இல்லையென்றால் பின்னர் கட்சித் தேர்தல்களின் முக்கியத்துவம்தான் என்ன?
இத்தகைய உட்கட்சித் தேர்தல்களின் தேவைதான் என்ன? என்று சில தலைவர்கள் குமுறலுடன் தெரிவித்துள்ள கருத்துகள் மஇகா வட்டாரங்களில் பரவி வருகின்றன.
செனட்டர் நியமனங்கள் என்பது ம.இ.கா தேசியத் தலைவரின் தனிப்பட்ட உரிமை அதில் மற்றவர்கள் தலையிடுவதோ, கருத்து தெரிவிப்பதோ கூடாது என சில ம.இ.கா தலைவர்கள் நேற்றைய பத்திரிக்கையில் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால், தேசியத் தலைவரின் தேர்வும் – நியமனமும் நடப்பு அரசியல் சூழ்நிலையை ஒட்டியும் – கட்சி உறுப்பினர்களின் எண்ண ஓட்டங்களையும், இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
அதைவிடுத்து, கட்சியில் ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, தனக்கு வேண்டியவர்களை, அரசியல் காரணங்களுக்காக நியமிக்கும் போக்கு, தலைமைத்துவத்தால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டால் அதனால், கட்சி பலவீனப்படும் என்பதோடு, கட்சி உறுப்பினர்கள் தலைமைத்துவம்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் சிதைந்து விடும்.
அடுத்த செனட்டர்கள் யார்? போராட்டம் ஆரம்பம்
இனி மஇகாவிற்கு எஞ்சியிருப்பது மூன்றே மூன்று செனட்டர் நியமனங்கள் தான். டத்தோ பாராட் மணியம் மற்றும் மகளிர் பகுதி துணைத் தலைவி சிவபாக்கியம் ஆகியோரின் செனட்டர் பதவிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தோடு நிறைவுக்கு வருகின்றன.
மற்றொரு செனட்டரான டத்தோ ஜஸ்பால் சிங்கின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பரோடு முடிவடைகிறது.
இதன்பிறகு, அடுத்த இரண்டாண்டுகளுக்கு செனட்டர் பதவிகள் ஏதும் இல்லை என்பதாலும் அடுத்த பொதுத் தேர்தல் 2018ஆம் ஆண்டில்தான் நடைபெறும் என்பதாலும் காலியாகவுள்ள மூன்று செனட்டர் பதவிகளையும் கைப்பற்ற பல முக்கிய ம.இ.கா தலைவர்கள் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.