கோலாலம்பூர், ஜூன் 23 – இலங்கையில் வழக்கமாக தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் அதற்கு எதிராக சில தமிழர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுப்பதும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும்தான் வழக்கமாக நம் நாட்டில் நடைபெறும் சம்பவங்களாகும்.
ஆனால், தற்போது இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதைத் தொடர்ந்து, அந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அண்மையில் கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் இஸ்லாமிய அமைப்புகளும் பொது அமைப்புகளும் ஒருங்கிணைந்து கண்டன குரல் எழுப்பியதுடன் இலங்கைத் தூதரகத்தில் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆட்சேப குறிப்பின் மூலம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தினரைப் பாதுகாப்பதில் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைத் தூதரகத்தின் முன் கூடிய தரப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இலங்கையின் தென் பகுதியிலுள்ள அலுட்காமா என்ற இடத்தில் பௌத்த சமயத்தினர் மற்றும் இஸ்லாமிய சமயத்தினருக்கும் இடையே சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த சமய தீவிரவாத சண்டையில் 3 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வேளையில், மேலும் 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த தீவிரவாத சண்டையைத் தடுப்பதற்கு இலங்கை அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக அந்த மகஜரை சமர்ப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல முக்கிய வர்த்தகங்களில் முஸ்லிம்களின் ஆதிக்கம் வலுத்துள்ளது. ஆகவே, அவர்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சில அமைப்பினர் இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இவர்கள் அண்மையில் அலுட்காமா பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லிம் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்களை அந்த சட்ட விரோத அமைப்பினர் அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்தும் கொளுத்தினர்.
வன்முறை தாக்குதல்களால் அச்சத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பை அந்நாட்டு அரசு வலுப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தூதரகத்தில் மகஜரை சமர்ப்பித்தப் பின்னர் மலேசிய அமைப்புகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த ஆவன செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.