கொழும்பு, ஜூன் 23 – இனம் மற்றும் மத ரீதியான தீவிரவாதத்தால் இலங்கை வீழ்ச்சியடைவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது பவுத்த மதத்தவர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.நா மனித உரிமை அமைப்பு உட்பட பலவேறு அமைப்புகள் மற்றும் நாடுகள் கண்டனம் தெரிவித்தும், இதுவரை அங்கு நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படுவதாகத் தெரியதில்லை. சமீபத்தில் பெருவலா, தர்கா நகர், அலுத்கமா பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியதாவது:-
“இதுபோன்ற தாக்குதலால் ஏற்படும் தீமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண யாரும் முன் வரமாட்டார்கள். இறுதியில், அரசுதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.”
“மக்களிடையே நிலவும் சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் சகித்துக் கொள்ள விரும்பாத சிறு கும்பல் ஒன்று, சர்வதேச அளவில் இலங்கைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும் நோக்குடன் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றது.”
“மதம் அல்லது இன ரீதியாக ஒரு பிரிவினர், மற்றொறு பிரிவினரை அடக்கியாள நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற தீவிர போக்குடையவர்கள், நாட்டை அழிக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.
பல வருடங்களாக பேரினவாதத்தை கையாண்டு பல உயிர்களைக் கொன்ற சிங்கள மேலாதிக்கம், தற்போது மதவாதத்தை கையில் எடுத்து இருப்பதாக நடுநிலையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.