கொழும்பு: இலங்கையின் சர்ச்சைக்குரிய போர்க்கால பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சே, இலங்கையின் ஏழாவது அதிபராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றார்.
வட மத்திய இலங்கையில் உள்ள பண்டைய இராச்சியம் அனுராதபுரத்தில் அமைந்துள்ள கி.மு140-ஆம் ஆண்டு ருவன்வேலி சேய புத்த கோவிலில், தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா முன்னிலையில் ராஜபக்சே பதவியேற்றார்.
தேசத்திற்கான தனது உரையில், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், நடுநிலை வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதாகவும் உறுதியளித்தார்.
70 வயதான ராஜபக்சே, 52 வயதான சுஜித் பிரேமதாசாவை 13 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக தேர்தல் ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்குப் பிறகு இவர் வரும் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆட்சியில் இருப்பார்.
2005 முதல் 2015 வரை நாட்டின் அதிபராக இருந்த அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் பாசில் ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் பதவி உறுதிமொழி விழாவில் பங்கேற்றனர்.
ராஜபக்சே 52.25 விழுக்காடு (6,924,255) வாக்குகளைப் பெற்றார், பிரேமதாசா, மொத்த வாக்குகளிலிருந்து 41.99 விழுக்காடு (5,564,239) வாக்குகளைப் பெற்றார். மற்ற வேட்பாளர்கள் 5.76 விழுக்காடு வாக்குகளைப் பெற்றனர்.
தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 83.73 விழுக்காடு பதிவானதாக இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்த தேசபிரியா தெரிவித்தார்.
தனது வெற்றியைத் தொடர்ந்து, ராஜபக்சே, நாட்டின் குடிமக்களுக்கு, தமக்கு எதிராக வாக்களித்தவர்கள் உட்பட, அவர்களின் இனத்தைப் பொருட்படுத்தாமல் சேவை செய்ய இருப்பதாகக் கூறினார்.
இதனிடையே, கோத்தாபய ராஜபக்சே தமது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.