கொழும்பு: நேற்று சனிக்கிழமை நடந்து முடிந்த இலங்கைக்கான அதிபர் தேர்தலில், இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்சே இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் மைத்ரிபால சிறிசேனா அப்பதவிலிருந்து விலகியதை அடுத்து இப்பதவிக்கு போட்டியிட்ட மற்ற 34 வேட்பாளர்களை ஒதுக்கி அவர் வெற்றிப் பெற்றுள்ளார்.
தனது டுவிட்டர் பதிவின் மூலம் ராஜபக்சே மக்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“நாம் இலங்கைக்கு ஒரு புதிய பயணத்தை மேற்கொண்ட போது, இலங்கையின் அனைத்து மக்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”
“அமைதியையும் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் அனுபவிப்போம்” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ராஜபக்சே சுமார் 54 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். அவரது நெருங்கிய போட்டியாளரான சுஜித் பிரேமதாசா 45.5 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளார்.
இலங்கையின் கிட்டத்தட்ட 16 மில்லியன் மக்களில் குறைந்தது 80 விழுக்காட்டினர் நேற்று சனிக்கிழமை வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்தார்.
2009-இல் முடிவுற்ற உள்நாட்டுப் போருக்குப் பிறகு நடக்கும் மூன்றாவது அதிபர் தேர்தல் இதுவாகும்.