கொழும்பு (மலேசிய நேரப்படி காலை 10:15): அதிகரித்து வரும் மத பதட்டங்களையும், மெதுவான பொருளாதாரத்தையும் கடந்து தெற்காசிய தீவான இலங்கையில் இன்று சனிக்கிழமை புதிய அதிபரைத் தேர்த்தெடுப்பதற்காக தேர்தலில் இலங்கைவாசிகள் வாக்களிக்க உள்ளனர்.
அதன்படி இன்று உள்ளூர் நேரப்படி காலை 7:00 மணிக்கு வாக்களிப்புத் தொடங்கியது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தாபயா ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (யுஎன்பி) வேட்பாளர் சஜித் பிரேமதாசா முக்கிய வேட்பாளராக இந்த தேர்தலில் கருதப்படுகின்றனர். மொத்தமாக 35 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 12,845 வாக்குச் சாவடிகளில் 15.9 மில்லியன் இலங்கையர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரலாற்று ரீதியாக, 2015 தேர்தலில் 81.5 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு வாரக்கால பிரச்சாரம் நாட்டை பிளவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பை சமாளிக்க வலுவான, மையப்படுத்தப்பட்ட தலைமையை கொண்டுவருவதாக ராஜபக்ஷ உறுதியளித்துள்ள நிலையில், இலங்கை தமிழ் கிளர்ச்சியாளர்களுடனான 26 ஆண்டுகால யுத்தத்தின் முடிவுக்கு தலைமை தாங்கிய பாதுகாப்பு அமைச்சர் என்ற தனது சான்றுகளை பெருமையாகக் கூறியுள்ளார்.