Home நாடு “வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை

“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை

2473
0
SHARE
Ad
அக்கினி சுகுமார் – பத்மினி சுகுமார்

(நேற்று சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவை பிரிவு நடத்திய ‘நினைவின் தடங்கள்’ நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மறைந்த மலேசியத் தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான அக்கினி சுகுமாருக்கும் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்காக அக்கினியின் துணைவியார் பத்மினி சுகுமார் பிரத்தியேகமாக எழுதி வழங்கிய இந்தக் கட்டுரையை செல்லியலில் பதிவேற்றம் செய்கிறோம்)

அக்கினி சுகுமார், மலேசியா தமிழ் எழுத்துலகில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. பத்திரிகையாளராகவும் படைப்பாளராகவும்,கவிஞராகவும்  மும்முனைகளில் முத்திரை பதித்தவர். அக்கினியின் இயற்பெயர் சுகுமார் வெள்ளத்துரை.

1973 ஆம் ஆண்டு இவரது தமிழ் பத்திரிகை பிரவேசம் ஆரம்பமானது. தமிழ் மலர் தினசரியில் ஆசிரியர் பகுதியில் சாதாரண எடுபிடி ஊழியராக தன்   பணியை ஊதியமில்லாமல் தொடங்கிய இவர், வானம்பாடி  வார இதழை உருவாக்கிய ஆதி குமணன்,இராஜகுமாரன்,அக்கினி என்கிற மூவரில் ஒருவர் என்கிற முத்திரையை பெற்றவர்.

#TamilSchoolmychoice

பின்னர் தமிழோசை தினசரியின் தொடக்க உறுப்பினர் என்பதோடு அதன் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். மலேசிய நண்பன் நாளிதழில் செய்தி ஆசிரியராகவும், மக்கள் ஓசை வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்று வந்துள்ள அக்கினி சுகுமார், பின்னர் தமிழ்க்குரல் நாளிதழின் உருவாக்கத்திற்கு ஆணிவேராக இருந்ததோடு அதன் ஆசிரியராகவும் பொறுப்பே ற்றிருந்தார்.

காலக்கோட்டில் தாம் உருவாக்கிய  ஊடகத்துறை தடம் புரண்ட போது, மூத்த பத்திரிகையான தமிழ்நேசன் நாளிதழின்  ஆசிரியர் பகுதி ஆலோசகராக ஏழு ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தார். இறுதியாக அவர்    ‘வணக்கம் மலேசியா.காம்’ இணைய ஏட்டில்  மூத்த பத்திரிகையாசிரியராகவும் பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்திரிகை துறையிலும் படைப்பு துறையிலும்  தமக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டிருந்தவர் அக்கினி சுகுமார். மலேசிய மண்ணில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு வித்தாகவும் முன்னோடியாக விளங்கியவர் .இவரது புதுக்கவிதைகள் ஒரு தலைமுறை எழுத்தாளர்களின் எழுச்சிக்கு துணை புரிந்தன.

கனா மகுடங்கள் புதுக் கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர், பட்டுப்புழுக்கள் என்ற குறுநாவல் ஒன்றையும் ,மண்ணே உயிரே என்ற ஈழப் பயண அனுபவங்களையும் நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக  ஊடகவியலாளராக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்து வந்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அரிய பேறு என்று அவர் அடிக்கடி கூறுவார்.

அவர் தமிழீழத்திற்கு சென்றிருந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடியான காலக்கட்டமாகும். பாதுகாப்பு, பயணம் என பலவேறு சிக்கல்களைத் தாண்டி அவர் செய்தியாளர் மாநாட்டில் அன்று கலந்து கொண்டார்.  அவரின்  மண்ணே உயிரை புத்தகம்  காலத்திற்கும் தடயமாக  இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதைகளுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கட்டுரைகளின் வழி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தவர் அக்கினி சுகுமார். ஆய்வியல், அரசியல், கலையியல்,ஆன்மிகம், விளையாட்டுத்துறை என பல்வகை கட்டுரைகளை எழுதி எழுத்துலகில் அழுத்தமாகக் காலூன்றியவர்.

அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் தருவதில் அக்கினி சுகுமார் தன்னிகரற்று  விளங்கியவர். அறிவியலை எளிமைப்படுத்தி  தமிழில் அவர் வாரி வழங்கிய கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் நினைவு கூறப்படுபவை எனலாம்.

இலக்கோ எதிர்ப்போ இல்லாமல் இவரது பத்திரிகை பயணம் அன்று ஆரம்பமானது. பின்னர் நாற்பது ஆண்டுகள் ஓடி மறைந்தன. செய்கிற பணியை செம்மையாக செய்தல் என்ற இலக்கும் எதிர்பார்ப்பும் அவரிடம் வேரூன்றியது போற்றத்தக்க விஷயமாகும் . இது அக்கினி சுகுமாரைப் பற்றிய பொதுவான ஊடகத்துறை  முன்னுரை சுவடுகளாகும்.

அக்கினி சுகுமார்,தன் ஊடகத் தொழில்,படைப்பைத் தவிர்த்து  மனைவி, மக்களை அதிகம் நேசித்தவர். பெரியார் சிந்தனையில் உழன்றவர். அதனால் பெண்கள் விஷயத்தில் முற்கோக்கு சிந்தனையை கடைபிடித்து வந்தவர்.

அக்கினி சுகுமாரை நான்  பார்த்த நாள் முதல் கரம் பிடித்த நாள் வரை வீட்டில் மட்டுமல்ல தொழிலிலும்,எழுத்துலகிலும்  அவருடனே  பயணித்தவள். எங்களுக்குள் இடைவெளி என்பது அவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற நாட்கள் மட்டுமே பராபரமே!

நான்  கண் கலங்கினால்   அவர்  ஆடி விடுவார். வாழும் வீட்டில் குடும்ப பெண்கள் அழக்கூடாது,  கண்ணீர் துளிகள் பூமியில்  சிந்தக்கூடாது என்று சமாதானம் படுத்துவார்.

ஆனால் இன்று… தனிமையில் நான்  அழுத கண்ணும்- சிந்திய மூக்குமாக இருக்கிறேன் . எங்கே ஓடிப்போய் மறைந்தீர் என கேட்கிறேன்.  பதிலே இல்லை. உமது ஆத்மா நன்நிலையில் சாந்தியடையட்டும் என மனதை தேற்றிக் கொள்கிறேன். கண்ணீர் துளிகளை கீழே சிந்தாமல் துடைத்துக் கொள்கிறேன் என் நண்பா!

காலன்,  பிணி ரூபத்தில் நம்மை பிரித்து விட்டான். கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையும் காலுமாக  நானும் மூன்று குழந்தைகளும் அலைந்தது இந்நிமிடம் வரை  நினைத்துப் பார்க்கிறேன். உமக்கு சேவை செய்து எங்கள்  பிறவிக் கடனை தீர்க்கவே அத்தருணங்கள் என உணர்கிறேன்.

திடீரென்று உமது ஆயிசு போயிருந்தால் கூட நாங்கள் பிறவிக் கடன்காரர்களாகி தவித்திருப்போம். அதிகாலையில் உமக்கு பல் துலக்கி விட்டது…முகம் துடைத்து ,தலை வாரி விட்டது….நெற்றியில் ஏடாகூடமாக திருநீறு  தடவி விட்டது ….கைகால்களை அமுக்கி விட்டது.கண் விழித்துபார்த்துக் கொண்டது  – இதெல்லாம் கண்முன்னே வந்து போகின்றன. இதையெல்லாம் விட ஆறிப்போன தேநீரை ‘செத்த தேநீர்’ என்பீர்.   சுடச்சுட தேநீரை ஊதி ஊதி சுவைப்பீர் வீட்டில். மருத்துவமனையிலோ அந்த ஆற வைத்த தேநீரை உமக்கு ஊட்டி விடும் போது  ‘என்ன ஒரு கொடுமைடா சாமி’ என என் மனம் நோகும்.

எப்படியாவது உமது  நலம்   மீட்டு, இல்லம் அழைத்து வர வேண்டும் என எவ்வளவோ பாடு பட்டோம். எங்களுக்காக மறு ஜென்மம் எடுத்தீர். இல்லை என்று நான் கூறவில்லை. மருத்துவர்களே அதிசயித்தனர். உமக்கு ‘மறுபிறப்பு’ என தங்கள் வைத்தியம் சார்ந்த   தொழில் மீது அதி நம்பிக்கை கொண்டனர். அப்போது என்மனதில் தோன்றியதை இப்போது உம்மிடம் கூறுகிறேன் நண்பா! கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாத உமக்கு ‘அக்கினி ஈஸ்வர்’ என  பெயரை கொஞ்சம் மாற்றியமைக்க  வேண்டும் என நினைத்துப் பார்த்தேன்.

கடைசி நேரத்தில் வீட்டுக்கு போகணும். வீட்டுக்கு போகணும் என்று அடம் பிடித்தீர்.  ஏன் அவ்வளவு அவசரம் என்றேன். இனி கொஞ்ச காலத்திற்கு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு நமக்காக போகிற போக்கில் இலகுவாக வாழ்வோம் என்று கூறினீர். வாரம்  ஒருநாள் உனக்கு பிடித்ததை நான் சமைக்கிறேன் என்றீர். தியேட்டர்ல படம் பார்க்க போகலாம் என கூறினீர். ஆனால் எல்லாம் மறந்து போனீர்! அதையெல்லாம் விட ‘மீண்டு  நிலைத்த நிழல்கள்’   நேர்காணலின் போது தாங்கள் கூறியதை  இப்போது நினைத்து நினைத்து மனம் வருடுகிறேன். உங்கள் ஆழ்மன வருத்தத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டுமே இப்போது!

(வல்லினம் வெளியிட்ட அக்கினி சுகுமார் குறித்த ஆவணப் படத்தில் இடம் பெற்ற நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகள்…)

“கடைசி காலத்தில்  என் வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயங்களை நான் தெரிந்தே இழந்திருக்கிறேன். தெரியாமல் இருந்தால் ஒரு மடங்கு வருத்தப்படுவேன்.  என்னை போன்று தெரிந்தே இழந்தவர்கள் நான்கு மடங்காக வருத்தப்படவேண்டும். ஒரு தப்பை தெரிந்து செய்தாலும் அதற்கான தண்டனையை  எதிர் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இது எனது தண்டனை காலம் . என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்த முக்கியமான ஒன்றை  நானே ஒதுக்கிவிட்டு ‘அய்யோ போச்சு’ என வருத்தப்படும் காலமிது. அது என் கவிதை. அதனை  விட்டு விலகி விட்டோமே என்ற வருத்தம் எனக்கு எல்லாக் காலத்திலும் உண்டு. இதற்கு நான் மட்டுமே பொறுப்பு.

ஓர் ஊடகவியலாளன் அவனுக்கு தெரிந்த தொழில் ஊடகத் தொழில். செய்தி எழுதுவது, அதற்கு அப்பால் படைப்பிலக்கியம் வருகிறது என்றால் அது ஒரு பெரிய விஷயம். படைப்பாளர்களும் – பத்திரிகையாளர்களும் வேறுவேறு. பத்திரிக்கையாளர் நிஜ உலகத்தில் வாழ்பவன். படைப்பாளன்  நிஜத்தில் உள்ள இன்னொரு உலகத்தில் வாழ்பவன் .ஆனால் இவை இரண்டும் ஒருசேர உள்ளவர்கள் ஒரு சிலர். அப்படி வெகு சிலரில் நானும் ஒருவன். ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளிலும் நான் வெற்றியாளனாக போய்க்கொண்டிருந்தேன். ஊடகம் என்னை முன்னோக்கி தள்ளிய வேகத்தில் நான்   முன்னே சென்று என்னுடைய படைப்பாளியை பின்னே தள்ளி விட்டு விட்டேன். முக்கியமாக கட்டுரைகள் எழுதுதல் என்னை ஆக்கிரமித்ததால் கவிதைகளை கவனக்குறைவாக விட்டதனால் அது என்னை மீறி வெகு தூரம்  விட்டு சென்று விட்டது. என் வாழ்க்கையை நான்  நிறைவோடு வாழ்ந்தாலும் அதில் ஓர் இழப்பு உண்டு. அது என் கவிதைகள் என்பேன்.

ஆனால்  இன்றும்  நான் அமர்ந்து யோசித்து மனதை ஒரு நிலைப்படுத்தினால் கூட, இரண்டே நாளில் மீண்டும் கவிஞனாக வருவேன் என்ற நம்பிக்கை இருப்பதனால்தான் என் வேதனையைக் குறைக்க முடிகிறது. அப்படியான  நம்பிக்கையில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். வயதும் ஓடிவிட்டது. எப்படி எட்டி பிடிப்பேன் என தெரியவில்லை. இந்த ஊடகத்துறையை தூக்கிப் போட்டு விட்டு மூன்று ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் அந்த நாட்கள் கவிதைக்குரிய நாட்களாக தான் இருக்க வேண்டும். வாழ்க்கையின் முடிவில், கடைசி காலத்தில் அந்த நேரத்தில் என் நினைவுகள் சரியாக இருந்தால் நான் இழந்தது என்னவென்று நீங்கள்  யாராவது கேட்டால் ‘கவிதை ‘என்பேன்”

– என்று பேட்டி கொடுத்தீர் . எல்லாம் இதற்காகத் தானா என் தீர்க்கத்தரிசியே! உனக்காக இதோ..என் கவிதை…!

என்னுள் நான்

இன்று  நீ

உன் இரங்கலில் நின்று

கிறங்கி பார்ப்பதும்

என்னோடு கொஞ்சம்

இறுக்கி நகர்த்துவதும்

நட்புக்காக என்னிதயம்

உனக்களித்த முதல் காதல்

என் நட்பே!

 

தோள் கொடுப்பான்

தோழன் என்பர்-

என் முரண்களோடு

நீ சமன் படுகையில்

நட்புக்கு நல்லதொரு இலக்கணத்தை

நீயே படித்து கொடுத்தாய்..!

நானே முடிந்து வைத்தேன்!

 

நீயே நட்பு

நானே நண்பன் என்பதை-

இருக்கும் வரை பாதி உணர்ந்தேன்

இல்லாத போது மீதி உயிர்த்தேன்

என்னோடு உன்னை

இரு கரம் குலுக்கி வைத்து

இறுமாந்து வருகிறேன் தோழா! நீ

இல்லையென்று யார் சொன்னது-

இல்லாமல் என்னுள்

நிரம்பி வழிவது தான் நிஜம்..!

 

நீ… நான்… நாம்…

நம் நட்பின் எல்லை

வான் விளிம்பையும்

ஒருமை பட வைக்கிறது..!

நான் வரும் வரை

காத்திரு  என் தோழா!

 

காத்திருத்தலும் வெறுமையில் இருத்தலும் கூட

அதி ஊடலையும் கூடலையும்

மனதுக்குள் ஊடுருவுமென

நீ உணர்த்தி வருகிறாய்!

அதே சமனத்தில்

வருவேன்  ஒரே நாள்

அதுவரை காத்திரு எனக்காக!

 

நீர் விட்டுப் போன கடமைகளில்

பாக்கியொன்று உண்டு

முடித்து விட்டு வருகிறேன்

பிள்ளைகளை அதிகம் நேசித்தவர்

அல்லவா நீர்!

அதை நிறைவேற்றாவிட்டால்

உமது நற்பெயருக்கு களங்கம்

வந்துவிடும்! அதுவரை

காத்திரு என் தோழா!

 

இப்படிக்கு:- உமது துணைவியார்

பத்மினி சுகுமார்!