கொழும்பு, ஜூன் 18 – இலங்கையில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அளுத்காமா நகரில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் மீது புத்த மதத்தைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. ஒரு வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அளுத்காமா மற்றும் பேருவளை ஆகிய நகரங்களில் இரு மதத்தவருக்கும் இடையே திங்கள்கிழமை இரவும் மோதல் ஏற்பட்டது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் நிலைமை கட்டுக்குள் வராமல், வன்முறை வெடித்தது. இதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இலங்கையின் முக்கிய பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அளுத்காமாவின் புறநகரான வெளிபெண்ணா பகுதிக்கும் வன்முறை பரவியதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இலங்கையில் மதத்தின் காரணமாக நடைபெறும் வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நியூயார்க்கில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“இலங்கையில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. மத வன்முறையை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
.