கோத்தாகினபாலு, பிப்ரவரி 18 – பொதுத் தேர்தல் நெருங்க, நெருங்க அனைவரின் பார்வையும் ஒருங்கே பாயும் அரசியல் களமாக, அடுத்த மத்திய அரசாங்கம் அமைவதற்கு அடித்தளம் அமைக்கப் போகும் மாநிலமாக, சபா மாறி வருகின்றது.
இந்த மாநிலத்தில் கூடிய விரைவில் பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கு முன்னோட்டமாக முன்னாள் சபா முதலமைச்சரும் லிபரல் டெமோக்ராடிக் கட்சியின் முன்னாள் தலைவருமான சோங் கா கியாட் கடந்த வாரம் அன்வார் இப்ராகிமைச் சந்தித்து பிகேஆர் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார் எனவும், கூடிய விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
சோங் ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் என்பதோடு, தஞ்சோங் காபூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைத் தவிர மேலும் இரண்டு தலைவர்கள் யப்பின் கிம்பொத்தோன் மற்றும் அஹ்மட்ஷா ஆகிய இருவரும் கூட பிகேஆர் கட்சியில் சேர்ந்துவிட்டதாக நம்பப்படுகின்றது என பிரி மலேசியா இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். அஹ்மட்ஷா மத்திய அரசாங்கத்தில் துணை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு வெளியானதும், இவர்களின் பிகேஆர் கட்சி இணைப்பு அறிவிப்பும் வெளியாகும் என்றும் அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புக்களும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.