கோலாலம்பூர், ஜூலை 21 – கடந்த வியாழக்கிழமை கிழக்கு உக்ரைனில் நடந்த எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்களை நோன்பு பெருநாளுக்குள் மலேசியாவிற்கு கொண்டுவர அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று நோன்பு திறக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
“அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் உடல்களை கூடிய விரைவில் மலேசியாவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றும் நஜிப் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை அறிந்து, தகுந்த நீதி வழங்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை முதல் தான் உறக்கம் மறந்து உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் நஜிப் தெரிவித்தார்.
எம்எச்17 விமான பேரிடரில் பாதிக்கப்பட்ட உறவினர்களை சந்தித்த போது தான் கலங்கிவிட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை 200 சடலங்கள் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.