வாஷிங்டன், ஜூலை 21 – பிரிக்ஸ் நாடுகள் உருவாக்க இருக்கும் ஒருங்கிணைந்த வங்கி மற்றும் நிதியம், உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
கடந்த 70 வருடங்களாக, உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் தருணத்தில், அந்நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை மேற்கத்திய நாடுகள் உருவாக்கிய ‘சர்வதேச நாணய நிதியம்’ ( International Monetary Fund) கவனித்து வந்தது. மேலும், உலக பொருளாதார நிலையை தாங்கும் தூணாகவும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. எனினும், இந்த அமைப்பு ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் தருணங்களில் கை கொடுப்பதில்லை என்ற விமர்சனமும் அவ்வபோது எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பிரேசிலில் நடந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ (BRICS) மாநாட்டில், அந்நாடுகளின் தலைவர்களால் மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி, பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து, இந்தியாவின் தலைமையில் ஒருங்கிணைந்த நிதியம் ஒன்றை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் படி சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என அந்நாடுகள் முடிவு செய்துள்ளன.
பிரிக்ஸ் நாடுகள் இந்த மேம்பாட்டு நிதியத்தை ஏற்படுத்துமாயின், மேற்கத்திய நாடுகளுக்கு, ஆசிய நாடுகளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கருத்தப்படுகின்றது.
இது பற்றி ஐஎம்எப் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிரிக்ஸ் நாடுகள் ஏற்படுத்த இருக்கும் இந்த நிதியம் எந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று இன்னும் அதிகார பூர்வமாக வெளியாகவில்லை. ஒருவேளை அந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால் பொருளாதார உதவி கோரும் நாடுகளுக்கு எதன் அடிப்படையில் பொருளுதவி செய்யும், இதற்கான சவால்களை பிரிக்ஸ் நாடுகள் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனவா போன்ற கேள்விகள் எழுகின்றன” என்று கூறியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள் உருவாக்க இருக்கும் நிதியம் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பிரேசிலின் அதிபர் தில்மா ரௌசெப் கூறுகையில், “சர்வதேச நாணய நிதியத்தை விட்டு தனித்து செயல்படும் எண்ணம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இல்லை. உலக நாடுகளுக்கு ஒரு சுதந்திரமான பிரதிநிதியாகவே செயல்படுத்த விரும்புகின்றோம்” என்று கூறியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் இந்த புதிய முயற்சி உலக அளவில் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துமா? அல்லது ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு மேற்குலக நாடுகளுடன் பிரிவினையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.