பெய்ஜிங், ஜூலை 24 – சீனாவில் உயிர் கொல்லி நோயான பிளேக், அங்குள்ள யூமென் நகரில் பரவி இருப்பதால் அந்நகருடனான அந்நிய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய உயிர் கொல்லி நோயான பிளேக், எலிகள் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டது.
பல்லாயிரம் மக்களை பலி வாங்கிய இந்த நோய், பின்னர் மருத்துவ முன்னேற்றம் காரணமாக முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 65 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிளேக் சீனாவில் பரவி இருப்பதாக கூறப்படுகின்றது.
வட மேற்கு சீனாவின் கான்சூ மாகாணத்தில் உள்ள யூமென் நகரில் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சமீபத்தில் அங்குள்ள மக்கள் பலருக்கு புது விதமான தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இந்நோய்க்கு அங்கு இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளதாகவும் கண்டறியப்பட்டது.
உடனடியாக அந்த நகரில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில், பலருக்கு கொடிய பிளேக் நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை அங்கு 151 பேர் மருவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தொற்றை ஒழிப்பதற்கான துரித நடவடிக்கைகளை பல்வேறு மருத்துவ குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
பிளேக் நோய் மேலும் பரவாமல் தடுக்க யூமென் நகரம் முழுவதிலும் அந்நிய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார்கள். அதே போன்று வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அந்நகருக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.