ஆஸ்திரேலியா, ஆகஸ்ட் 1 – இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாமைச் சேர்ந்த 157 இலங்கைத் தமிழர்கள் புதுச்சேரியில் இருந்து கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். அவர்களது படகை கிறிஸ்துமஸ் தீவு அருகே ஆஸ்திரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியது.
தற்போது அவர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் கர்டின் குடியேற்றவாசிகள் தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் ஏ.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“இலங்கைத் தமிழர்களுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இது தொடர்பாக பல்வேறு திட்டங்களை முன் வைத்து இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி எந்தெந்த முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அடையாளம் காணலாம் என்று யோசனை கூறினோம். ஆனால் இந்தத் திட்டத்தை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.
அடுத்ததாக சுங்கத்துறை கப்பலில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அங்கு விசாரணை நடத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இந்திய தூதரக அதிகாரிகளை கப்பலுக்கு அழைத்துச் செல்வது கடினம். எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது கர்டின் குடியேற்ற வாசிகள் தடுப்பு மையத்துக்கு இலங்கைத் தமிழர்களை அழைத்துச் சென்றுள்ளோம். அங்கு வைத்து இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஒருவேளை இந்திய தூதரக அதிகாரிகளின் விசாரணைக்கு இலங்கைத் தமிழர்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.
சர்வதேச கடல்சார் விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.