இந்த சர்ச்சையில் தற்போது உள்ளே நுழைந்துள்ள ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி, ஆண்டுதோறும் இந்தியர்களின் நலன்களுக்காக அரசாங்கம் 540 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகவும், அதற்குரிய முறையான கணக்கு விவரங்களை ம.இ.கா தேசியத்தலைவர் ஜி.பழனிவேல் அறிவிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.
இந்திய சமுதாயம் இன்னும் சமூக, பொருளாதார ரீதியாக அவல நிலையில் இருக்க, அரசாங்கம் கொட்டிக் கொடுத்த இத்தனை கோடி ரிங்கிட்டுகள் எங்கே எனக் கேள்வி எழுப்பியுள்ள வேதமூர்த்தி, அடுத்த 7 நாட்களுக்குள் முழு புள்ளிவிவரக் கணக்குகளை பழனிவேல் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
அரசாங்கம் வழங்கிய நிதியின் உண்மையான தொகைகளை பழனிவேல் அறிவிக்க வேண்டும் – அதே வேளையில் இந்தப்பணம் யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது – எந்த இயக்கத்திற்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களையும் பழனிவேல் முழுமையாக அறிவிக்க வேண்டும் என்றும் வேதமூர்த்தி வேண்டுகோள் கொடுத்துள்ளார்.
இந்த அரசாங்க நிதி ஒதுக்கீடு விவகாரங்களால், மஇகா தலைவர்களிடையே அறிக்கைப் போர் மூண்டுள்ளது ஒருபுறமிருக்க, தினந்தோறும் பத்திரிக்கைகளில் அலசப்படும் இந்த விவகாரங்களால் ஏற்கனவே இறங்குமுகமாக இருக்கும் மஇகாவின் மதிப்பும் மரியாதையும் தற்போது அதலப் பாதாளத்திற்கு சென்றுள்ளது.