தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நிருபர்களை சந்தித்துப் பேசிய ராஜபக்சே, ‘இப்படி நிகழ்ந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக அறிக்கை தரும்படி கேட்டுள்ளேன்’ என்றார்.
நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்த முடையவை என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கடந்த 1-ம் தேதி கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சித்திரமும் இடம்பெற்றிருந்தன.
இந்த கட்டுரை ஜெயலலிதாவையும் மோடியையும் இழிவு செய்வதாக இருந்தது. இதற்கு இந்தியாவில் பலத்த கண்டனம் எழுந்ததால் பாதுகாப்பு அமைச்சகம், இணைய தளத்திலிருந்து அந்த கட்டுரையை உடனடியாக நீக்கியது. இந்தியாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியது.
இந்த கட்டுரை வெளியான சில மணி நேரங்களில் இந்தியாவில் பெரும் அமளி வெடித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
பாஜகவின் கூட்டணி கட்சிகளான பாமக, மதிமுக ஆகியவை இலங்கையுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தின.
இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னாவை திங்கள்கிழமை நேரில் அழைத்து இந்த கட்டுரை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், கொழும்பில் நிருபர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அதிபர் ராஜபக்சே, ‘இப்படி நிகழ்ந்ததற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக அறிக்கை தரும்படி கேட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.