Home கலை உலகம் ‘மைந்தன்’ படத்தில் பாடல் பிரபலம் ஷைலா நாயரின் முதல் திரைப்படப் பிரவேசம்!

‘மைந்தன்’ படத்தில் பாடல் பிரபலம் ஷைலா நாயரின் முதல் திரைப்படப் பிரவேசம்!

1797
0
SHARE
Ad

Shaila Nairகோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – நாளை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மலேசியத் திரையரங்குகளை அலங்கரிக்கவிருக்கும் உள்நாட்டுத் தமிழ்ப் படம் ‘மைந்தன்’.

சி.குமரேசன் இயக்கத்தில் எஸ்.எஸ்.வாவாசான் மற்றும் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனங்களின் இணைத் தயாரிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் மைந்தன்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் இரண்டு கதாநாயகியரில் ஒருவர் ஷைலா நாயர். மற்றொருவர் டிஎச்ஆர் வானொலி புகழ் புன்னகைப் பூ கீதா ஆவார்.

#TamilSchoolmychoice

உள்நாட்டுப் பாடகியாக மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவர் ஷைலா நாயர்.

இசைப்பாடல் ஆர்வம் ஒருபுறமிருக்க, சட்டத்துறை பட்டதாரியுமான ஷைலா நாயர் ‘மைந்தன்’ மூலம் முதன் முதலாக ஒரு தமிழ்ப் படத்தில் இரு நாயகியரில் ஒருவராக நடித்துள்ளார்.

செல்லியல் தகவல் ஊடகம்,‘மைந்தன்’ படக் குழுவினரோடு நடத்திய பிரத்தியேக நேர்காணலில் கலந்து கொண்ட ஷைலா நாயர். தனது முதல் திரைப்படப் பிரவேசம் குறித்து தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“பாடல் துறையில் ஆர்வம் கொண்டிருந்த நான் திரைப்படத்தில் நடிப்பது பற்றி யோசித்ததும் இல்லை. முயற்சித்ததும் இல்லை. ஆனால், மைந்தன் படத்தை இயக்கிய குமரேசன் என்னை வற்புறுத்தி இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். பலமுறை என்னைத் தொடர்பு கொண்டு அவர் இந்தப் படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துப் போக நடிக்க ஒப்புக் கொண்டேன்” என ஷைலா தனது முதல் திரைப்படப் பிரவேசம் குறித்து தெரிவித்தார்.

பாடலும் பாடியுள்ள ஷைலா 

ஷைலாவின் பாடல் திறனையும் இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ள குமரேசன், அவருக்கு ஒரு பாடல் பாடும் வாய்ப்பையும் தந்திருக்கின்றார். ‘இதயம் மேலே பறக்கிறதே’ எனத் தொடங்கும் பாடலை ஷைலா இந்தப் படத்தில் பாடியிருக்கின்றார்.

இந்த பாடலைப் பாடும் படி நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நேர்காணலின் போது இரண்டு வரிகள் மிக அழகாக பாடியும் காட்டினார்.

தனது முதல் பட அனுபவம் என்பதால், சில காட்சிகளில் நடிக்கும் போது தடுமாறியதாக குறிப்பிட்ட ஷைலா “இயக்குநர் காட்சியை விவரிக்கும்போது சாதாரணமாக கேட்டுக் கொண்டிருப்பேன். அப்புறம்தான் நான் அந்தக் காட்சியில் நடிக்கப் போகின்றேன் என்ற உணர்வுக்கு வருவேன். இதையெல்லாம் நானே செய்ய வேண்டுமா என்ற உணர்வுக்கு வருவேன்” என்று கூறினார்.

இதுவரை பாடல் துறையில் முத்திரை பதித்து மலேசிய-சிங்கை இரசிகர்களை கவர்ந்துள்ள ஷைலா நாயர், இனி திரையுலகிலும் ஒரு தனது முத்திரையைப் பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அதற்கு அவருக்கு முன்னுரை வழங்கவிருக்கும் படம்தான் ‘மைந்தன்’.

ஷைலா நாயர் செல்லியலுக்கென வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் ஒரு பகுதியை கீழே உள்ள காணொளியின் (வீடியோ) வழி காணலாம்: