Home One Line P2 திரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்

திரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்

2547
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுவாக மலேசியத் தமிழ்ப் படங்கள் என்று வரும்போது, அவை தமிழ் நாட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு நிகராக இருப்பதில்லை என்ற கண்ணோட்டம் எப்போதும் உண்டு. அதை மாற்றியமைத்திருக்கிறது நேற்று வியாழக்கிழமை நவம்பர்  14 முதல் சுமார் 65 மலேசியத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கும் ‘புலனாய்வு’ திரைப்படம்.

மலேசியத் தயாரிப்பு என்பதால் ஒப்புக்கு பாராட்ட வேண்டும் என்பதற்காக இதைத் சொல்லவில்லை. மாறாக, புலனாய்வு படம் தொடங்கியதிலிருந்து இறுதி வரை இரண்டு காரணங்களுக்காக நிமிர்ந்து உட்கார்ந்து கண் இமைக்காமல் படம் பார்க்கத் தொடங்கினேன்.

ஷாலினி பாலசுந்தரன்-கபில் கணேசன் – சதீஸ் நடராஜன்

முதல் காரணம், இரண்டு மணி நேரப் படமாக, இறுதிவரை மர்ம முடிச்சுகளோடு, பரபரப்பும், விறுவிறுப்புமாக, அடுத்தடுத்து காட்சிகள் நகர்வது.

#TamilSchoolmychoice

இரண்டாவது காரணம் படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை அமைப்பு, பின்னணி இசை, தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் என எல்லாத் தளங்களிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு, தமிழ் நாட்டு சினிமாப் படங்களுக்கு நிகராக – சில படங்களை ஒப்பிடும்போது அவற்றை விட மேலாக – அமைந்திருக்கிறது, புலனாய்வு.

ஒருசில பலவீனங்களை, திரைக்கதைக் கோளாறுகளை சரி செய்திருந்தால் படத்தின் தரம் இன்னும் உயர்ந்திருக்கும்.

கதை, திரைக்கதை

முழுக்க, முழுக்க இளைஞர் பட்டாளத்தின் ஆக்கிரமிப்பில் அமைந்திருக்கும் இந்தப் படத்தின் கதைக் களமும், பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களைச் சுற்றி வருவதுதான்.

ஷாலினி பாலசுந்தரம் – சதீஸ் நடராஜன் – ஷைலா நாயர்

முதல் காட்சியிலேயே, இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இறந்து கிடக்க, இரத்தம் சிதறிய முகத்துடன், ஒரு கை காயம்பட்டு கட்டப்பட்ட நிலையில், கையில் துப்பாக்கியுடன் அங்கு நிற்கிறார் நாயகி ஐஸ்வர்யா (ஷாலினி பாலசுந்தரம்). அந்தக் கொலை வழக்கைத் துப்பு துலக்க முற்படும் உயர் அதிகாரி பைரவி (டத்தோ ஷைலா நாயர்). ஏற்கனவே அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நிகழும் இன்னொரு கொலை பின்னோக்கிக் காட்டப்பட – முழுக்க முழுக்க காவல் துறை அதிகாரிகளின் புலனாய்வுப் பாதையிலேயே நகர்கிறது படம்.

பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் எழும், காதல், அதில் பிறக்கும் பொறாமை, தொடர்ந்த மோதல்கள், காதல்வெறியினால் எதிர்பாராமல் ஏற்படும் கொலை என ஒரு தளத்தில் செல்லும் கதை, இன்னொரு தளத்தில் கொலைகளைத் துப்பறியும் காவல் துறை அதிகாரி ஷைலா நாயருக்கு ஏற்படும் மிரட்டல்கள், அவரது மகளும், கணவரும் எதிர்நோக்கும் சோதனைகள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என திரைக்கதை நகர்கிறது.

இறுதியில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, உண்மையான கொலைகாரன் யார், மரணங்கள் எப்படி ஏற்பட்டன, ஷைலா நாயரை மிரட்டிய மர்ம நபர் யார் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வருகின்றன.

படத்தின் சிறப்பம்சங்கள்

எடுத்த எடுப்பிலேயே கொலைகள், காவல் துறை முற்றுகை என விறுவிறுப்பாகத் தொடங்குவது நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து வைக்கிறது. தொடர்ந்து புலனாய்வு பாதையிலேயே படம் முழுவதும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு இரண்டுமே கச்சிதமாக அனைத்துலகத் தரத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. படத்தின் இயக்கத்தை (தனது மனைவி) ஷாலினி பாலசுந்தரத்துடன் இணைந்து சிறப்பாகக் கையாண்டிருக்கும் சதீஸ் நடராஜனே ஒளிப்பதிவையும், படத் தொகுப்பையும் சுமந்து அந்தப் பணிகளையும் குறைவின்றி செய்திருக்கிறார்.

திரைக்கதை அமைப்பிலும், படத் தொகுப்பிலும் உள்ள சில குளறுபடிகளைப் பின்னர் பார்ப்போம்.

தமிழ்ப் பட இசையமைப்பாளர்களைப் போல ஒவ்வொரு காட்சியின் தன்மையறிந்து அதற்கேற்ப பொருத்தமான இசைக் கோர்வையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜெய் இராகவேந்திரா. நவீன முறையில் சிம்பொனி இசை பாணியில் வெளிநாடுகளில் இதற்கான இசைக்கோர்ப்பு நடைபெற்றதாகவும், அதுவே பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் ஜெய் இராகவேந்திரா பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதனால்தான் அத்தனை சிறப்பாக அமைந்திருக்கிறது போலும்!

படத்தின் மற்றொரு பலம் நடிப்பு. அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக மலேசியப் படங்களுக்கே உரிய ‘ஓவர் ஆக்டிங்’ எனப்படும் அளவுக்கதிகமாக நடிக்கும் போக்கைப் பின்பற்றாமல் நடித்திருக்கின்றனர்.

ஷாலினிக்கு அவரது குரல் மிகவும் கைகொடுக்கிறது. உருக்கமாகத் தனது நிலையை அவர் விவரிக்கும் காட்சிகளில் அவரது குரல் தன்மை காட்சிகளுக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.

அதே போல, மிடுக்கும், கம்பீரமும் கலந்த அதிகாரத் தோரணையை தனது காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் ஷைலா நாயர். அவரது உடல் வாகும் அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் காட்டுவதற்கு பயன்படுகிறது.

கதையமைப்பில் சில புத்திசாலித்தனத்தனங்களையும் இயக்குநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் அண்ட்ரூ என்ற ஒரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கி, நம்மையும், படத்தின் கதாபாத்திரங்களையும் யோசிக்க வைத்திருக்கின்றனர்.

இறுதிவரை, படத்தின் மர்ம முடிச்சுகளை, திருப்பங்களைக் காப்பாற்றி, கதை அமைத்திருப்பதும் இயக்குநர்களின் திறனுக்கு சான்று.

பலவீனங்கள் – திரைக்கதை குளறுபடிகள்

ஐந்தாவது நாள் என்று தொடங்கும் திரைக்கதையில் பின்னர் இரண்டு மாதத்துக்கு முன்பு என்று சில சம்பவங்களும், தொடர்ந்து நாள் ஒன்று என்று சில சம்பவங்களையும் காட்டி விட்டு, பின்னர் மீண்டும் ஐந்தாவது நாள் என்று வருவது தொடர்ச்சியைப் பாதிப்பதோடு, நம்மையும் குழப்புகிறது. நாட்கள் மாறும்போது நாமும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

நாள் 3, 4 எனப் பார்த்ததாகவும் ஞாபகம் இல்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய பின்னடைவு.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாகக் காட்டப்படும் சம்பவத்தை முதலில் காட்டி விட்டு படத்தை ஆரம்பித்து, அதன்பின்னர், ஒவ்வொரு நாளாகக் காட்டியிருந்தால் திரைக்கதை குழப்பமில்லாமல் இருந்திருக்கும்.

அப்படிப் பார்த்தால், ஐந்து நாட்களிலேயே படத்தின் மொத்தக் கதையும் முடிந்து விடுகிறது. ஆனால், ஒரு காட்சியில் காவல் துறை அதிகாரி பைரவி, இத்தனை நாட்களாகியும் இந்த கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆத்திரப்படுகிறார்.

இடைவேளைக்குப் பின்னரும் ஒரே பாணியில் புலனாய்வுகள் தொடர்ந்து கொண்டே இருப்பது சற்று போரடிக்க வைக்கிறது. இருந்தாலும் கொஞ்ச நேரம்தான் என்பதால் விட்டு விடலாம். ஆனால், ஷாலினி முதலில் ஒரு கதையைச் சொல்லி விட்டு, பின்னர் இறுதியில் “அங்க நடந்தது வேற மேடம்” என்று கூறத் தொடங்குவது இன்னொரு குழப்பம். ஏன் அப்படி மாற்றிச் சொல்கிறார், யாரைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்பது குறித்த விளக்கம் இல்லை.

படத்தின் இறுதிக் காட்சியில் சக காவல் துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க, ஷைலா நாயர் இன்னொரு பெண் அதிகாரியுடன் தெருச் சண்டை போடுவது, அப்படியே தமிழ் சினிமாத்தனம். கதைக்கும் தேவையில்லாத ஒன்று. தவிர்த்திருக்கலாம்.

காவல் துறையில் பிடிபட்ட பின்னரும், காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு, அதே இரத்தம் தோய்ந்த முகத்துடன் ஷாலினி நடந்தவற்றைக் கூறுவது யதார்த்தம் இல்லை. முகத்தைக் கழுவக் கூடவா அனுமதித்திருக்க மாட்டார்கள்? கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சிறுவயது முதல் பல ஆண்டுகளாகக் காதலித்து விட்டு, அந்தக் காதல் தோல்வியில் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு காதல் முளைப்பது நம்பும்படி இல்லை. காதலின் வலிமையையும் காட்டவில்லை.

இப்படியாக, திரைக்கதையில் சில குழப்பங்களையும், குளறுபடிகளையும், தமிழ் சினிமாத்தனங்களையும் தவிர்த்திருந்தால், படத்தின் தரமும், உருவாக்கமும் மேலும் பல படிகள் உயர்ந்திருக்கும்.

‘புலனாய்வு’ ஒரு மலேசியப் படம் என்பதால், ஆதரவு தருவதற்காக நாம் பார்க்க வேண்டிய படம் என்பது மட்டுமல்ல – தமிழ்நாட்டுப் படங்களுக்கு நிகரான சினிமா அனுபவத்தைத் தருகின்ற காரணத்தாலும்,

கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமே!

-இரா.முத்தரசன்