Home One Line P2 புதிய சாதனை எல்லைகளைத் தொடுகின்றது மலேசியப் படமான ‘புலனாய்வு’

புதிய சாதனை எல்லைகளைத் தொடுகின்றது மலேசியப் படமான ‘புலனாய்வு’

499
0
SHARE

கோலாலம்பூர் – சாதாரணமாக ஆண்டுக்கு ஓரிரு படங்கள் என சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் மெதுவாகத் தொடங்கிய மலேசியத் தமிழ்த் திரையுலகத்தின் வளர்ச்சி, தற்போது பிரம்மாண்டமான அளவுக்கு விரிவடைந்துள்ளதோடு, வசூலிலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தொழில்நுட்பங்களிலும் அபரிதமான முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றது.

தற்போது சுமார் 12 தமிழ்ப் படங்கள் மலேசியாவில் வெவ்வேறு நிலையில் தயாரிப்பில் இருந்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

பினாஸ் எனப்படும், தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவு – குறைந்தது இரண்டு வாரங்களுக்கு உள்நாட்டுப் படங்கள் திரையிடப்பட வேண்டும் என்ற அரசாங்க விதி – அஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளின் மூலம் கிடைக்கும் விளம்பரங்கள் – ஊடகங்கள், சமூக ஊடகங்களின் வழி கிடைக்கும் ஆதரவு – எனப் பலதரப்பட்ட அம்சங்கள் காரணமாக உள்நாட்டுத் தமிழ்ப் படங்கள் அபரிதமான முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், மலேசியத் தமிழ்த் திரையுலகை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் வகையில் வெளிவந்திருக்கிறது இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் – சதீஸ் நடராஜன் இணை இயக்கத்தில் இன்று நவம்பர் 14 முதல் திரையேறும் புலனாய்வு திரைப்படம்.

முதன் முறையாக, இதுவரை எந்த ஒரு மலேசியத் திரைப்படத்திற்கும் கிடைத்திராத அளவிற்கு 65 திரையரங்குகள் வரை வழங்கப்பட்டு மிக விரிவான, நாடு தழுவிய திரையீட்டைக் காண்கிறது ‘புலனாய்வு’.

வழக்கமாக தமிழ் நாட்டுப் படங்களுக்குத்தான் இந்த அளவுக்கு திரையரங்குகள் ஒதுக்கப்படும். அந்தப் போக்கை முதன் முறையாக மாற்றியிருக்கிறது. புலனாய்வு.

குறிப்பாக, புலனாய்வு திரைப்படம் கடல் கலந்து சபா மாநிலத்தின் சண்டாக்கான் மற்றும் சரவாக் மாநிலத்தின் கூச்சிங்கில் உள்ள திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஸ்டோரி பிலிம்ஸ்’ மற்றும் ‘ஷாய்பா விஷன்’ இணைந்து தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காதல், மர்மம், கொலைகளைச் சுற்றி காவல் துறை நடத்தும் புலனாய்வுகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய கதையைக் கொண்டுள்ளது.

ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில், ‘கீதையின் ராதை’, ‘திருடாதே பாப்பா திருடாதே’, ‘இரயில் பயணங்கள்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஷாலினிக்கு இது மூன்றாவது முழுநீளத்திரைப்படமாகவும், ‘மைந்தன்’, ‘மயங்காதே’ திரைப்படங்களுக்குப் பிறகு நடிகை மற்றும் பாடகியுமான டத்தின்ஸ்ரீ ஷைலா நாயருக்கு இது மூன்றாவது திரைப்படமாகவும் அமைவதால் இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

அதே வேளையில், இத்திரைப்படத்தில் ஷாலினி பாலசுந்தரம், ஷைலா நாயர், ஆகியோரோடு, கபில் கணேசன், ‘ஒலா போலா’ திரைப்படப் புகழ் சரண் குமார், ஷாபி, கிருத்திகா கயல், பாஷினி, டெஸ்மாண்ட் தாஸ், லே ஷர்வாந்த் என ஓர் இளைஞர் பட்டாளமே முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜெய் ராகவேந்திரா இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தில் மொத்தம் இரண்டு பாடல்களும், பட விளம்பரத்திற்காகப் பிரத்தியேகமாக ஒரு பாடலும் உருவாக்கப்பட்டது.

அப்பாடல்களை யுவாஜி, பீனிக்ஸ்தாசன் மற்றும் சதீஸ் நடராஜன் ஆகியோர் எழுத, ஷக்திஸ்ரீ கோபாலன், சின்மயி மற்றும் குமரேஸ் கமலக்கண்ணன் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

புலனாய்வு திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் கீழ்க்காணும்இணைப்பில் காணலாம்:

அடுத்து : எப்படி இருக்கிறது ‘புலனாய்வு’? செல்லியல் திரைவிமர்சனம் விவரிக்கின்றது…

Comments