கோலாலம்பூர்: அண்மையில் நடந்த தொரோந்தோ அனைத்துலக தமிழ் திரைப்பட விழா 2020- இல் குற்றவியல் திகில் திரைப்படப் பிரிவுக்கான சிறந்த திரைப்பட விருதை ஷைபா விஷன் தயாரித்த ‘புலனாய்வு’ தமிழ் படம் பெற்றது.
சாலினி பாலசுந்தரம் மற்றும் அவரது கணவர் சதீஷ் நடராஜன் இயக்கிய இப்படம் 2019 நவம்பரில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அதன் தயாரிப்பாளர் ஷைலா நாயர், ஒரு மலேசிய தமிழ் திரைப்படத்தைப் அனைத்துலக அரங்கில் பார்த்து, விருதுப் பெறுவதை அசாதாரண உணர்வு என்று கூறினார்.
“அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலனாய்வு நம்பமுடியாத வெற்றியாகும். மேலும் இந்த குற்றவியல் திகில் படத்தின் கடின உழைப்பையும் தனித்துவத்தையும் குறிக்கிறது.
“உலகெங்கிலும் உள்ள பல தமிழ் படங்கள் இந்த விழாவில் பங்கேற்றதால் இந்த விருது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.” என்று அவர் கூறினார்.
இந்த விழாவிற்கான நடுவர்களாக பிரபல திரைப்பட இயக்குனர்களான வெற்றி மாறன் மற்றும் ராம், நடிகர்கள் நாசர், ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்ததாக ஷைலா கூறினார்.
மேலும், தமிழ் புலம்பெயர் திரைப்பட பிரிவின் கீழ் சிறந்த நடிகை மற்றும் சிறந்த திரைக்கதைக்கு 11- வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் புலனாய்வு திரைப்படம் இரண்டு விருதுகளையும் வென்றது.
சிறந்த நடிகைக்கான விருதை ஷைலா நாயர் வென்றார். சிறந்த திரைக்கதைக்கு சாலினி மற்றும் சதீஷ் வென்றனர்.