கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தீபாவளிக் குதூகலத்துடன் மக்கள் ஒரு மிக முக்கிய சமூக விழிப்புணர்வையும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஷாய்பா விஷன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான ஷசிதரன், தனது சொந்த நிறுவனமான செம்போய் புரோடக்சன்ஸ் இணை பங்களிப்பின் மூலம் ‘லைட் அப் சம் ஒன்ஸ் லைஃப் தீபாவளி 2017’ அதாவது ‘சிலரது வாழ்வில் ஒளியேற்றுவோம்’ என்ற தலைப்பில் இணையப்படம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்.
‘ஆட்டிசம்’ பற்றிய விழிப்புணர்வுப் படமான இது தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
உங்கள் குழந்தை கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவில்லை; உங்கள் கண்ணைப் பார்த்து பேசவில்லை; மற்ற குழந்தைகளுடன் சகஜமாக விளையாடவில்லை; அப்படியே விளையாடினாலும் காரணமே இல்லாமல் அடிக்கிறது, கிள்ளுகிறது, என்னமோ ஒருவகையில் மற்ற குழந்தைகளிமிருந்து சற்று வித்தியாசப்பட்டே இருப்பதாகத் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெறுவது நல்லது. காரணம் அது ஆட்டிசம் பாதிப்பாக இருக்கலாம் என்கிறது மருத்துவம்.
அதேவேளையில், ஆட்டிசம் பாதிப்புகள் உறுதியானால் என்னமோ ஏதோவென்று பதறவும் வேண்டாம். காரணம், எல்லோரும் பயப்படுவது போல் ஆட்டிசம் என்பது ஒரு மன நோய் அல்ல. இதை ‘Spectral Disorder’ என்கிறது மருத்துவம். மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு தான். இந்த குறைப்பாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்தால் நிச்சயமாக உங்கள் குழந்தையை அதிலிருந்து மீட்டு மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக வளர்க்கலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் மருத்துவர்கள்.
மின்சார பல்பைக் கண்டுபிடித்து உலகிற்கே வெளிச்சத்தைக் கொடுத்த அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் கூட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே ஆரம்பத்திலேயே அதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டால், உங்களது சிறப்புக் குழந்தை பல சாதனைகளைப் படைக்கும் என்பதைச் சொல்லவே, இன்று அக்டோபர் 16-ம் தேதி, திங்கட்கிழமை, மதியம் 3 மணியளவில், ‘ஷாய்பா விஷனின்’ பேஸ்புக் பக்கத்தில், ‘‘லைட் அப் சம் ஒன்ஸ் லைஃப்’ என்ற இணையப் படம் வெளியாகிறது.
இப்படத்தில், டத்தின் ஷைலா நாயர், திலா லக்ஷ்மண், முகேன் ராவ், ஹரீஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இது குறித்து ஷாய்பா விஷன் நிறுவனர் டத்தின் ஷைலா நாயர் கூறுகையில்,
“ஆட்டிசம் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் அவர்களுக்கென்று சில தனித்திறமைகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து அதனை ஊக்குவித்து, அவர்களின் மீது தொடர்ந்து அன்பு செலுத்தினால், அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.”
“தாமஸ் எடிசனைப் பாருங்கள். அப்படி தான் அந்த அறிவியல் மேதையும் உருவானார். எனவே இந்த தீபாவளிக்கு, ‘சிலரது வாழ்வில் ஒளியேற்றுவோம்’ அவர்களுக்கு நம்பிக்கையையும், கனவுகளையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவோம். இந்த அழகான இணையப்படத்தை அனைவரும் பார்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து நமது அன்பை வெளிப்படுத்துவோம்” என்று ஷைலா தெரிவித்தார்.
இதனிடையே, படத்தின் இயக்குநரான ஷசிதரன் கூறுகையில், “தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நாங்கள் ஒரு விழிப்புணர்வைப் படத்தை வெளியிடலாம் என்று நினைத்து, ‘லைட் அப் சம் ஒன்ஸ் லைஃப்’ என்ற ஆட்டிசம் விழிப்புணர்வு இணையப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். தாமஸ் எடிசனின் உண்மையான கதை. அவரும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர் தான். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கைவிட்டுவிடக் கூடாது. குறிப்பாகப் பெற்றோர்கள் கைவிட்டுவிடக் கூடாது.”
“காரணம் அவர்கள் தான் முதலில் ஆட்டிசம் பாதிப்பை அறிந்தவுடன் ஏற்றுக் கொள்ள முடியாமல் கைவிட்டுவிடுவார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த விழிப்புணர்வுப் படம் இயக்கப்பட்டிருக்கிறது. தாமஸ் எடிசனின் பெற்றோர் அவரின் ஆட்டிசம் பாதிப்பை அறிந்து அதனை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தியதால் தான் அவரால் இவ்வளவு பெரிய சாதனைகளை அடைய முடிந்தது.”
“எனவே அப்படிப்பட்ட சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்தில் எங்களது குழு இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். 6 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படம் இணையப்படமான பேஸ்புக்கில் வெளியாகிறது. வெப் ஃபிலிம் என்றழைக்கப்படும் இது போன்ற குறும்படங்கள் தீபாவளி சமயத்தில் அதிகமாகக் காணலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் இது போன்ற வெப் பிலிம்களை வெளியிடுவார்கள். ஏன் வெப் பிலிமாக வெளியிடுகிறோம் என்றால் இது முற்றிலும் சேவை மனப்பான்மையின் அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றது. மக்கள் தற்போது அதிகமாகப் பார்த்து கொண்டிருக்கும் பேஸ்புக் போன்ற இணையப்பக்கங்களில் வெளியிடும் போது அதிகளவு மக்களைச் சென்றடைய முடியும். எனவே அனைவரும் இந்த படத்தைப் பார்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்” என்று இயக்குநர் ஷசிதரன் தெரிவித்தார்.
இப்படத்தில் பெர்சாமா ‘Pertubuhan Sayang Autisme Malaysia- PERSAMA’ என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவரும் பாடகியுமான திலா லக்ஷ்மண் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளாக ஆட்டிசம் குழந்தைகளின் நலனுக்காக தொண்டாற்றி வரும் திலா லக்ஷ்மண், ஒவ்வொரு ஆண்டும் உலக ஆட்டிசம் தினத்தன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், நாசோம் (Nasom – The National Autism Society of Malaysia) அமைப்பைச் சேர்ந்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளும் இந்த இணையப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
எனவே இன்று திங்கட்கிழமை வெளியாகும் இந்த இணையப்படத்தைத் தவறாமல் பார்த்து அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து சிறப்புக் குழந்தைகள் பலரது வாழ்வில் ஒளியேற்றுவோம்.
பிற்பகல் 3 மணியளவில் இந்த இணையப்படத்தைக் காண கீழ்காணும் பேஸ்புக் பக்கத்தை வலம் வரவும்.
https://www.facebook.com/shaibhavision/
Produced by Shaibhavision
Production Partner: Sempoi Productions
Casts: Shaila Nair, Thila Laxshman, Mugen Rao, Garish
Prod. Mgr: Gopal
Dop: Udhayakumaran/Ranjan, Stills: Manimala Krishnan
Grip & Lights: Magen
Audio: Guna
Editor: Ranjan
BGM: Jey Raggaveindra
Make-up: Kannan Raajamanickam
Stylist: Yogesh
Director: Shashi Tharan