தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிமோகா மாவட்டத்தில் நடந்து வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மங்களூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்தார்.
ரஜினிகாந்த் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் மங்களூர் விமான நிலையத்தில் திரண்டனர். பின்னர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
“சிமோகாவில் நடக்கும் லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மங்களூர் வந்துள்ளேன். நான் இங்கு 22 ஆண்டுகள் கழித்து வந்துள்ளேன்.
ஆனாலும் எனக்கு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வேகமாக வளர்ந்து வரும் லிங்கா படத்தை, எனது பிறந்த நாளான டிசம்பர் 12–ம் தேதி திரைக்கு கொண்டு வர வேலைகள் நடந்து வருகிறது” என ரஜினிகாந்த் கூறினார்.
அப்போது ஒரு நிருபர் ரஜினிகாந்திடம், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்து ரஜினிகாந்த் கூறுகையில், ‘அரசியலில் நுழைவது தெய்வச் செயல். கடவுள் மனது வைத்தால் அது நடக்கும். ஒரு மாநிலத்தின் முதல்வரை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தீர்களே, தற்போது உடல் நிலை எப்படி இருக்கிறது என்று மற்றொரு நிருபர் கேட்டபோது, ‘தற்போது நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்’ என்றார். இதையடுத்து ரஜினிகாந்த் கார் மூலம் சிமோகாவுக்கு புறப்பட்டு சென்றார்