கோலாலம்பூர், செப்டம்பர் 8 – தெற்காசிய அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தகம், வருவாய் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் மலேசியா, தனது மக்களின் தனி நபர் வருவாயை உயர்த்துவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. எதிர்வரும் 2019-ம் ஆண்டிற்குள் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு 48,352 ரிங்கெட்டுகளாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து நாட்டின் இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ செரி அகமத் கஸ்னி கனாட்ஸ்லாக் கூறுகையில், “உலகப் பொருளாதாரம் குறிப்பிடத் தக்க அளவில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், நமது குறிக்கோள் சாத்தியமாகும் என்றே நான் நம்புகின்றேன்.”
“இந்த வருடத்தின் முதல் பாதியில், பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் இந்த வருடத்தின் இறுதியில் அது 5.5 அல்லது 6 சதவீதமாக மாறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.”
“இந்த சீரான வளர்ச்சி ஆச்சரியத்தை அளிக்கின்றது. சராசரியாக மலேசிய மக்களின் குடும்ப வருமானம் 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை உள்ள கணக்கீட்டின்படி மாதத்திற்கு சுமார் 5,000 ரிங்கெட்டுகள் ஆகும். எனினும் 40 சதவீத மக்கள் இன்னும் 5,000 ரிங்கெட்டுகளுக்கு கீழாக வருமானம் பெறுகின்றனர்.”
“இந்த நிலையை மாற்ற அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக கிராமப்புற சமூகங்களின் நிலையை மாற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளார்.