நியூயார்க், செப்டம்பர் 29 – ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூனுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக, அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனை, ஐ.நா.சபையின் தலைமை அலுவலகத்தில் அவரை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது மோடியுடன், ஆலோசனை நடத்திய பான் கி மூன், தீவிரவாதத்துக்கு எதிராக ஐ.நா. சபை எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவிற்கு நிரந்திர இடம் அளிக்க வேண்டும் என்ற நீண்ட கால எதிர்பார்ப்பை சுட்டிக்காட்டும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது ஆண்டு விழாவினை அடுத்த ஆண்டு கொண்டாடவுள்ள நிலையில் ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் வேண்டும் என்பதை மோடி, பான் கி மூனிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம், ஐ.நா.சபையில் சிறப்புரையாற்றிய மோடி சீர்திருத்தம் பற்றி கூறுகையில், “15 நாடுகள் மட்டும் இடம்பெற்றுள்ள ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் மாற்றப்பட வேண்டும். அதில் ஜனநாயகமும் சமவாய்ப்பும் நிலவ வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.