Home அவசியம் படிக்க வேண்டியவை அமெரிக்க விசா திட்டத்தில் மலேசியா இணையும் – சாஹிட் ஹமீடி தகவல்

அமெரிக்க விசா திட்டத்தில் மலேசியா இணையும் – சாஹிட் ஹமீடி தகவல்

542
0
SHARE
Ad

Ahmad Zahid Hamidiநியூயார்க், செப்டம்பர் 29 – அடுத்த 18 மாதங்களில் அமெரிக்காவின் விசா திட்டத்தில் மலேசியாவும் இணைய திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் வழி மலேசியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்காமலேயே அமெரிக்காவுக்குச் செல்ல முடியும் என்றும் வர்த்தகம் அல்லது சுற்றுலாவுக்காக செல்லும் மலேசியர்கள் அங்கு 90 நாட்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

 அமெரிக்க விசா திட்டத்தில் அண்டை நாடுகளாக சிங்கப்பூர் மற்றும் புரூனே உட்பட இன்று வரை மொத்தம் 37 நாடுகள் இணைந்துள்ளதாக நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

 கடந்த ஏப்ரலில் மலேசியாவுக்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ஓபாமாவுடன் இத்திட்டம் குறித்து பிரதமர் நஜிப் விரிவாக விவாதித்ததாக குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தில் இணைவதற்கான விதிமுறைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் மலேசிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

 “கடப்பிதழ் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் மலேசியர்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் வழி மலேசியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்கள் மற்றும் அங்கு முதலீடு செய்யும் மலேசிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். மலேசியர்கள் அமெரிக்காவில் நுழையும் முன்பே, பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் மலேசியாவிற்குள் பூர்த்தி செய்யப்படும்.

 “மலேசிய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் கடுமையாக்கப்படும். இதன் மூலம் சந்தேகப் பட்டியலில் உள்ளவர்களை எளிதில் கண்டறிய வழிவகை செய்யப்படும். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் மலேசியாவும் இணைந்து செயல்படும்,” என்றார் சாஹிட் ஹமீடி.

 சிரியா மற்றும் ஏமனில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் இதுவரை 34 மலேசியர்கள் இணைந்திருப்பதாக அவர் மேலும் உறுதி செய்தார்.